ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பர்ரா நகரில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்சில் ‘ஜோ பர்ன்ஸ்’, ‘டிராவிஸ் ஹெட்’, மற்றும் ‘குர்தீஸ் பேட்டர்சன்’ அபார சதங்களுடன் 5 விக்கெட்டுக்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ‘ஃபாலோ ஆன்’ ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணரத்னே 59 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ‘மிட்செல் ஸ்டார்க்’ 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலங்கைக்கு ‘ஃபாலோ ஆன்’ வழங்காமல் 319 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. சிறப்பாக ஆடிய ‘உஸ்மான் கவாஜா’ தனது 8 வது டெஸ்ட் போட்டி சதத்தை பூர்த்தி செய்ய, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கவாஜா 101 ரன்களுடனும் டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பின்னர் 517 ரன்கள் எடுத்தால் தொடரை சமன் செய்யலாம் என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் இந்த முறையும் மிச்செல் ஸ்டார்க் மிரட்ட, இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கருணரத்னே 8 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க, சக வீரர் திரிமன்னே 30 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சமீப காலமாக தொடர்ந்து சொதப்பி வரும் ‘கேப்டன்‘ சண்டிமால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் களமிறங்கிய அறிமுக வீரர் சமிகா கருணரத்னே 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு சிறிது நேரம் தாக்குப்பிடித்த குசல் மென்டிஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க அத்துடன் இலங்கையின் நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது.
முடிவில் இலங்கை அணி 149 ரன்களுக்குச் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 367 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிச்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக பந்துவீசிய கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி கடந்த 2017-18 ‘ஆஷஸ்‘ வெற்றிக்கு பிறகு பெற்ற முதல் தொடர் வெற்றி இதுவாகும்.
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்கிஸ்லும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிக்கு பக்கபலமாக இருந்த ‘மிட்செல் ஸ்டார்க்’ ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த தொடரில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பேட்டிங்கிலும் பங்களிப்பு சேர்த்த ஆஸ்திரேலிய வீரர் ‘பேட் கம்மின்ஸ்’ தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்தியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இழந்த போதிலும், இந்த தொடரை வெற்றியுடன் முடித்திருப்பது அந்த அணிக்கு நிச்சயம் தன்னம்பிக்கை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.