இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியை இந்திய அணியும் வெல்ல, தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் தொடரை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் கொண்ட இந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
வலது கை சுழற்பந்துவீச்சாளர் ‘ஆடம் சாம்பா’ மற்றும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ‘பில்லி ஸ்டன்லக்கே’ ஆகியோர் கடைசி ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த இரண்டு போட்டிகளிலும் மோசமாக பந்துவீசி சொதப்பிய சுழற்பந்துவீச்சாளர் ‘நாதன் லயன்’ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த இரண்டு போட்டிகளிலும் மிகச் சிறப்பாக பந்துவீசிய ‘ஜேசன் பேரன்டாப்’ முதுகு பிரச்சினையின் காரணமாக இப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் அணியில் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு சிறிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இதுமட்டுமின்றி வலது கை வேகப்பந்து வீச்சாளர் ‘கனே ரிச்சர்ட்சன்’ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் தற்போதைய 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஏதேனும் ஒரு பந்துவீச்சாளர் விலக நேரிட்டால் இவர் அணியில் இடம் பிடிப்பார்.
மேலும் சமீபகாலமாக தொடர்ந்து சொதப்பி வரும் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
அணி தேர்வு குறித்து ஆஸ்திரேலியா அணி கேப்டன் ‘ஆரோன் பின்ச்’ அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், “நேதன் லயன் உண்மையில் சிறப்பாக பந்துவீசவே முயற்சிக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. அவர் தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீசும் போது அவருக்கு நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும்”.
மேலும் அவர் கூறுகையில், “அணியின் வெற்றிக்காக சில நேரம் இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. நாங்கள் இந்தத் தொடரில் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டிருக்கிறோம். நாங்கள் சமீபத்திய நிலையில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க தொடர் வெற்றியையும் அடையவில்லை. தற்போதைய நிலையில் இந்திய அணிக்கு எதிராக இந்தத் தொடரை வெல்வது எங்களது முக்கிய நோக்கமாகும்”. இவ்வாறு ஆரோன் பின்ச் அளித்துள்ள பேட்டியில் கூறி உள்ளார்.
தற்போதைய ஆஸ்திரேலிய அணி கடந்த 23 ஒருநாள் போட்டி ஆட்டங்களில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால் அது ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி பெற்ற முதல் தொடர் வெற்றியாக அமையும்.
ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் நம்பிக்கை அளித்து வருகின்றனர். மேலும் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னஸ் ஆகியோரின் ஆட்டமும் சிறப்பாக இருந்து வருகிறது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் தன்னம்பிக்கையுடன் சிறப்பாக பந்துவீசினால் இந்திய அணியை வீழ்த்தி சாதனை படைக்க முடியும்.
கடைசி ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஆரோன் பின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, உஸ்மான் காவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப், கிலன் மேஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னஸ், பீட்டர் சிடில், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா, பில்லி ஸ்டன்லக்கே.
தொடரை நிர்ணயிக்கும் இந்த பரபரப்பான போட்டி நாளை மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது.
எழுத்து : விவேக் இராமச்சந்திரன்.