இன்று கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் என்றால், அது நம் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா தான். தனது துல்லியமான மற்றும் வேகமான பந்துவீச்சால் இறுதிகட்ட ஓவர்களில் எத்தனை திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் “மண்ணை கவ்வ” விடுபவர் பும்ரா. தனது பிரத்யேகமான பந்துவீசும் முறையால், இன்று உலகின் நம்பர் ஒன் பவுலராக திகழ்கிறார் பும்ரா. அவரது பந்துவீசும் முறை குறித்தும், அவாது இளமை காலம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் முன்னாள் பயிற்சியாளர்கள்.
குஜராத் தலைமை பயிற்சியாளர் விஜய் படேல் கூறுகையில், “இளம் வயதில் பும்ரா, நிர்மான் மேல்நிலைப் பள்ளிக்காக விளையாடி வந்தார். வித்தியாசமான முறையில் ஒரு மாணவன் பந்துவீசுவதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதனால் அவர் விளையாடும் போட்டியை நாங்கள் பார்க்கச் சென்றோம். அதிகமான வேகத்தில் பந்துவீசுவதோடு விக்கெட்டையும் எடுத்து கொண்டிருந்தான் அந்த மாணவன். இவரின் வேகம் மற்றும் பந்துவீசும் முறைக்காக மட்டுமே இவரை மாவட்ட அளவிலான கிரிகெட் போட்டிகளில் விளையாட வைத்தோம்”.
“இன்றும் கூட இவரது வித்தியாசமான பந்துவீசும் முறை அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் இடைஞ்சல் கொடுக்கிறது. இந்த முறையை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. இவர் இதுபோன்று பந்து வீசி கொண்டிருந்தால் எளிதாக காயம் அடைவார் என பலர் எங்களிடம் கூறினர். MRF பேஸ் பவுண்டேஷனுக்கு பும்ராவை அனுப்பி வைத்தோம். அங்கு பிரபல வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி கூட, பும்ராவின் பந்துவீசும் முறையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். இன்றைய காலங்களில், தங்கள் உடலில் உள்ள பலவீனமான பகுதிகளை வலுப்படுத்தி உடற்தகுதியோடு இருக்கிறார்கள் வீரர்கள். அதுபோல தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பிடித்துக் கொண்டார் பும்ரா”
ஆரம்பத்தில் பும்ராவின் பந்தில் பேட்ஸ்மேன்களுக்கு LBW கொடுக்க நடுவர்கள் மறுத்து வந்தார்கள். ஏனென்றால் இவரது பந்துவீசும் முறையால் அனைத்து பந்துகளும் “இன் ஸ்விங்” தான் செல்லும், அதனால் ஸ்ட்ம்பை பந்து தகர்க்காது என நடுவர்கள் நினைத்திருந்தனர். அதன்பிறகு “அவுட் ஸ்விங்” மற்றும் பலவிதமான டெலிவரிகளை கற்று கொண்டார் பும்ரா.
முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும் தற்போதைய குஜராத் அணியின் பவுலிங் பயிற்சியாளருமான ஹிதேஷ் மஜும்தார் கூறுகையில், “2013-ல் முதல் முறையாக நான் பும்ராவை பார்க்கும் போது, அவரிடம் வேகம் மட்டுமே இருந்தது. லைன் மற்றும் லென்த் போடுவதில் அவருக்கு சில பிரச்சனை இருந்தது. டி20 வடிவம் வளர்ச்சியடைய தொடங்கியதும், தனது கடுமையான உழைப்பால் இன்று உலகமே அஞ்சும் பந்துவீச்சாளராக உயர்ந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது, ஷான் போலாக், ஷேன் பாண்ட் மற்றும் லசித் மலிங்கா ஆகியரோடு உரையாட பும்ரவிற்கு வாய்பு கிடைத்தது. அதன் பிறகு லைன் மற்றும் லெந்த் போடுவதில் தன்னை நன்றாக மேம்படுத்தி கொண்டார்.
பும்ராவின் திறமையை இளம் வயதிலேயே கண்டுகொண்ட மற்றொரு நபர், அஹமதாபாத் கபாடியா பள்ளியின் பயிற்சியாளரும் பத்திரிக்கையாளருமான நரேந்திர பஞ்சோலி. அவர் கூறுகையில், “2007-08ல் அவரை சந்தித்தேன். பள்ளி அணிகளுக்கான தகுதி தேர்விற்கு பும்ராவும் வந்திருந்தார். அப்போதும் அவரது பந்துவீசும் முறை இன்றுள்ளது போல் தான் இருந்தது. ஸ்டம்பை நோக்கி பந்துவீசினால் உனக்கு விக்கெட் கிடைக்கும் என அவரிடம் கூறினேன். அன்று அவர் வீசிய பந்தை எந்த பேட்ஸ்மேனாலும் பார்க்க கூட முடியவில்லை, அவ்வுளவு வேகம் அதில் இருந்தது. 14 வயதிற்குள்ளான பந்துவீச்சாளருக்கு இது சற்று அதிகமே" என்றார்.
உலக கோப்பையில் பும்ராவையே கேப்டன் கோலி முழுமையாக நம்பியுள்ளார். 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் பும்ராவின் பந்துவீச்சு அவுளவு சிறப்பாக இல்லை. அந்த தொடரில் ஐந்து போட்டிகளில் 42 ஓவர்கள் வீசி வெறும் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். இந்த முறை இங்கிலாந்தில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்று தருவாரா பும்ரா? பொறுத்திருந்து பார்ப்போம்.