உலககோப்பை தொடரின் 5வது போட்டி இன்று லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் துவங்கியது. இதில் தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த தென்னாப்ரிக்க அணியும் தனது முதலாவது போட்டியில் பங்கேற்கும் வங்கதேச அணியும் மோதின. இரு அணிகளும் வெற்றிக் கணக்கை துவங்கும் நோக்கில் விளையாடுவதால் இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் காயமடைந்த ஆம்லா இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே அவருக்கு பதிலாக மில்லர் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல் கிரிஷ் மோரிஷுக்கும் இந்தமுறை அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது.
வங்கதேச அணியின் துவக்க வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து அணிக்கு அதிரடியான துவக்கம் தந்தனர். ஒருமுனையில் தமீம் நிதானமாக ஆட மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்தார் சவுமியா சர்க்கார். 8.2 ஓவருக்கு வங்கதேச அணி 60 ரன்கள் குவித்திருந்த நிலையில் தமீம் இக்பால் ஃபிலுக்வாயோ பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். அதனைத் தொடர்ந்து சவுமியா சர்க்காரும் 42 ரன்களில் மோரிஷ் பந்தில் ஆட்டமிழக்க அந்த அணி 75 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய சகீப் அல் ஹாசன் மற்றும் ரஹீம் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் அணியின் சூழ்நிலையை உணர்ந்து ஆடத் துவங்கினர். அவ்வபோது கிடைக்கும் பந்துகளை பவுண்டரிகள் விளாசி தங்களது அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் இருவரின் ஆட்டத்தில் வங்கதேச அணி சரிவிலிருந்து மீண்டது. இருவரும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் குவித்தது. சதமடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சகீப் மற்றும் ரஹீம் இருவரும் முறையே 75 மற்றும் 78 ரன்கள் எடுத்த நிலையில் தங்களது விக்கெட்டுகளை தாகிர் மற்றும் ஃபிலுக்வாயோவிடம் இழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய மிதுன் 21 ரன்கள் எடுத்த நிலையில் தாகிர் சுழலில் தனது விக்கெட்டை இழந்தார். இருந்த போதிலும் அடுத்து வந்த முஹமதுல்லா மற்றும் மொஷடெக் உசேன் இணைந்து அணியின் ஸ்கோரை 330 ரன்களுக்கு கொண்டு சென்றனர். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 330 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த போட்டியில் அடிக்கப்பட்ட ஸாகோர் தான் உலககோப்பை தொடரில் வங்கதேச அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.
பின்னர் 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி தென்னாப்ரிக்க அணி களமிறங்கியது. டீ காக் மற்றும் மார்க்ரம் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமாக துவக்கம் தந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீ காக் 23 ரன்களில் ரன் அவுட்டானார். அதனைத் தொடர்ந்து மார்க்ரம் 45 ரன்களில் இருந்த போது சகீப் பந்தில் விக்கெட்டினை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் டூ பிளசிஸ் மில்லர் உடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ் அரை சதத்தை கடந்த நிலையில் மெஹதி ஹாசன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மில்லரும் 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் போட்டி வங்கதேச அணியின் பக்கம் திரும்பியது. அடுத்து வந்த எந்த வரும் நிலைத்து ஆடவில்லை. வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் தென்னாப்ரிக்க அணி 50 ஓவர் முடிவில் 309 ரன்கள் மட்டுமே குவித்தது. எனவே போட்டியை வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசூர் ரகுமான் 3 விக்கெட்டுகளையூம், சாய்பூதின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த தோல்வியின் மூலம் தென்னாப்ரிக்க அணி தொடர்ந்து 2 பேட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.