நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளை தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரியமும் மே மாத இறுதியில் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் 2019 உலகக் கோப்பைக்கு தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இன்று(ஏப்ரல் 16) வங்க தேசத்தின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்ளா சர்வதேச மைதானத்தில் நடந்த கூட்டத்தில் வங்க தேச கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் நஜ்முல்-ஹாசன்-பாபோன் 15 பேர் கொண்ட வங்கதேச அணியை அறிவித்தார்.
வங்கதேச அணியின் முன்னணி வீரர்கள் கடந்த இரு மாதங்களாக காயம் காரணமாக அவதிபட்டு வந்தனர். கடந்த மாதத்தில் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மெக்மதுல்லா ரியாட்-டிற்கு தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டது. அத்துடன் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஷ்டஃபிசுர் ரகுமான் தாக்கா ஓடிஐ பிரிமியர் லீக்கில் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு கண்டிப்பாக குறைத்தது இரண்டு வாரங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
2015 உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருபேல் ஹசைனும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முஷ்டஃபிசுர் ரஹீம் பங்கேற்கவில்லை. தமீம் இக்பாலும் காயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. காயத்திலிருந்து மீண்டு வந்த ஷகிப் அல் ஹாசன் 2019 பங்களாதேஷ் பிரிமியர் லீக்கில் தாக்கா டைனமிட்ஸ் அணிக்காக விளையாடி மேலும் காயத்தை அதிகபடுத்திக் கொண்டார்.
கடந்த ஆண்டில் இவருக்கு இரண்டு விரல்களிலும் காயம் ஏற்பட்டு மீண்டு வந்துள்ளார் ஷகிப் அல் ஹாசன். இவர் உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பது சந்தேகம்தான். அத்துடன் அவர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனது தாய் நாட்டிற்காக தனது சிறப்பான ஆட்டத்தை உலகக் கோப்பையில் வெளிபடுத்துவார் என தெரிகிறது. வங்கதேச அணியின் அனுபவ ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் தற்போது ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்களான ஷகிப் அல் ஹாசன், முஷ்டபிசுர் ரகுமான், முஷ்டபிசுர் ரஹீம், ருபேல் ஹசைன், தமீம் இக்பால் ஆகிய அனைத்து வீரர்களும் வங்கதேச உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். 2015 உலகக் கோப்பையில் வங்கதேச கேப்டனாக இருந்த மஷ்ரஃப் மொர்டாஜா இவ்வருட வங்கதேச உலகக் கோப்பை அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷகிப் அல் ஹாசன் துனைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்தும் காயம் காரணமாக விலகிய டஷ்கின் அகமது உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை.
2019 வங்கதேச பிரிமியர் லீக்கில் அசத்திய டஷ்கின் அகமதுவிற்கு நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 2018 அன்று நடந்த ஆசிய கோப்பையில் அசத்திய ஆல்-ரவுண்டர் மொஷதீக் ஹைசைன் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். ஒரு சர்வதேச ஒருநாள் தொடரில் கூட பங்குபெறாத அபு ஜெயத் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லிடன் தாஸ், சௌம்யா சர்கர், முகமது ஷைய்ஃபுதின், மெஷிடி ஹாசன் மிராஜ் ஆகியோரும் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளனர். 2019 உலகக் கோப்பை தொடரில் ஜீன் 2 அன்று வங்கதேச அணி தனது முதல் தனது போட்டியில் தென்னாப்பிரிக்கா-வை எதிர்கொள்ள இருக்கிறது.
அணி விவரம்: மஷ்ரஃப் மொர்டாஜா (கேப்டன்), தமீம் இக்பால், மேக்மதுல்லா, முஷ்டபிசுர் ரஹீம், ஷகிப் அல் ஹாசன் (துனைக்கேப்டன்), சௌம்யா சர்கர், லிடன் தாஸ், மெஹிடி ஹாசன், முகமது மிதுன், சபீர் ரகுமான், ருபேல் ஹசைன், முஷ்டபிசுர் ரகுமான், முகமது ஷைஃப்புதின், மொஷாதிக் ஹொசைன், அபு ஜெயத்.