மேற்கிந்திய தீவுகள் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் & டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. வங்கதேசம் ஏற்கனவே 2-0 என டெஸ்ட் தொடரையும் 2-1 என ஒரு நாள் போட்டித் தொடரையும் கைப்பற்றி இருந்தது. பின்னர் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வென்றிருந்தது. டி20 தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 இன்று தாக்கா-வில் மாலை 4:30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
டி20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் லிவிஸ் மற்றும் ஷை ஹோப் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே லிவிஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த ஆரம்பித்தார். வெறும் 18 பந்துகளில் தனது அரை சதத்தை விளாசினார். 5வது ஓவரில் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் ஷை ஹோப் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 12 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 23 ரன்களை அடித்தார். முதலாவது பவர் ஃபிளே முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் அடித்திருந்தது.
பின்னர் களமிறங்கிய கீமோ பால் நிலைத்து ஆடாமல் 2 ரன்களில் முஷ்டபிசுர் ரகுமான் வீசிய பந்தில் அரிபுல் ஹாக்கிடம் கேட்ச் ஆனார். அதிரடியாக விளையாடி வந்த லிவிஸ் 9 ஓவரில் மெக்மதுல்லா வீசிய பந்தில் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸருடன் 89 ரன்களை விளாசித் தள்ளினார். பின்னர் அடுத்த பந்திலேயே ஹட்மயர்-ரும் எல்.பி.டபுள்யு ஆகி வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ரோவ்மன் பவுல் 19 ரன்களிலும் பூரான் 29 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மேற்கிந்திய தீவுகள் அணி மொத்தமாக 19 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் , முஷ்டபிசுர் ரகுமான் மற்றும் மக்மதுல்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
191 என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தமிம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். 2வது ஓவரில் தமிம் இக்பால் ஷை ஹோப்-யிடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 6 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்ஸருடன் 8 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய சௌமியா சர்கார்-ரும் ஃபேபியன் ஆலன் வீசிய பந்தில் காட்ரெலிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 10 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்ஸருடன் 9 ரன்களை அடித்தார். பின்னர் அடுத்த பந்திலேயே அதிரடி ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் அதே கார்டெலிடம் கேட்ச் ஆகி வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 25 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார்.
அதன்பின் களமிறங்கிய ரஹிம் 1 ரன்னிலும், மெக்மதுல்லா 11 ரன்னிலும் , மெஹிடி ஹாசன் 19 ரன்களிலும் அபு ஹைடர் 22 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
வங்கதேச அணி 17 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை அடித்தது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என டி20 தொடரை கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கீமோ பால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் ஒரு ரன் அவுட்டும் செய்தார். ஆலன் 2 விக்கெட்டுகளையும் , பிராத்வெய்ட மற்றும் காட்ரெல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடிய லிவிஸ் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார் . ஷகிப் அல் ஹசன் தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.