விண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வங்கதேச அணி வென்றுள்ளது. இந்திய சுற்று பயணத்தை முடித்து கொண்டு விண்டீஸ் அணி வங்கதேசதுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வங்கதேச அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க விண்டீஸ் அணி வங்கதேசம் சென்றுள்ளது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி வென்றது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்றது.
காயம் காரணமாக விண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹால்டர் இந்த தொடரில் விளையாடவில்லை. அவருக்கு பதில் ரோவ்மான் பவல் கேப்டனாக செயல்பட்டார். வங்கதேச தரப்பில் காயத்தில் இருந்து முழுவதும் குணம் அடைந்த துவக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் அணியில் மீண்டும் இடம் பெற்றார்.
தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் டாக்கா நகரத்தில் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த விண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 43 ரன்கள் குவித்தார். வங்கதேச தரப்பில் கேப்டன் மோட்ராஸா 3 விக்கெட்கள் கைப்பற்றினார். பின்னர் ஆடிய வங்கதேச அணி 35 ஓவர்களில் இலக்கை அடைந்தது. அந்த அணியின் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் குவித்தார்.
இரண்டவது ஆட்டத்தில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. 50 ஓவர்களில் வங்கதேச அணி 255 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம், சாகிப் அல் ஹசன் மூவரும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். விண்டீஸ் தரப்பில் இளம் வீரர் ஓஷேன் தாமஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 256 என்ற இலக்கை நோக்கி விண்டீஸ் அணி ஆடியது. அந்த அணியின் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 144 பந்துகளில் 146 ரன்கள் குவித்தது விண்டீஸ் அணியை வெற்றிபெற செய்தார். விண்டீஸ் அணி 2 பந்துகள் மீதம் இருக்கையில் இலக்கை அடைந்தது. வங்கதேசம் சார்பில் முஸ்தாபிஸுர் மற்றும் ரூபேல் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
யார் தொடரை வெல்வார் என தீர்மானிக்கும் தொடரின் மூன்றாம் மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி ஷைலெட் நகரில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசியது. துவக்கம் முதலே சீராக விக்கெட்டுகளை இழந்த விண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே குவித்தது. விண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 131 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். வங்கதேச தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மெஹ்தி ஹசன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 197 என்ற எளிதான இலக்கை வங்கதேச அணி 38.3 ஓவர்களில் எளிதில் சேஸ் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் தமீம் இக்பால் அதிகபட்சமாக 81 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக சவும்யா சர்க்கார் 80 ரன்கள் குவித்தார். விண்டீஸ் தரப்பில் வங்கதேச அணியின் 2 விக்கெட்களை கீமோ பால் கைப்பற்றினார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வங்கதேசம் 2-1என்ற கணக்கில் வென்றது. தொடர்நாயகனாக 3ஆட்டங்களில் இரண்டு சதங்களுடன் 297 ரன்கள் குவித்த விண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் தேர்வு செய்யப்பட்டார்.
சமீப காலமாக வங்கதேச அணி தனது சொந்த மண்ணில் இந்தியா,தென் ஆப்ரிக்கா,ஜிம்பாப்வே போன்ற நாடுகளை ஒரு தின போட்டித் தொடர்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் திங்கள்கிழமை ஷைலெட் நகரில் துவங்க உள்ளது.