கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போன்ற மூன்று வகையான போட்டிகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இதில் பந்து வீச்சாளர் பந்தை வீசும் போது பேட்ஸ்மேன் அந்த பந்து வீச்சாளரின் பந்துகளை அடிக்க முடியாமலோ அல்லது அடிக்க வேண்டாமென்றோ அந்த ஓவர் முழுவதும் பந்துகளை வீணடிப்பது மெய்டன் ஓவர் எனப்படும்.
டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர் மெய்டன் ஓவரை வீசினால் அது ஆச்சர்யமாக பார்க்கப்படும். இதுவே ஒருநாள் போட்டிகளில் மெய்டன் ஓவர் வீசப்பட்டால் அதுவும் சிறப்பானதாகவே கருதப்படுகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் மெய்டன் ஓவர் வீசுவது சாதாரணமே. ஆனால் ஒரு வீரர் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து அல்லது ஆறு ஒவர்கள் மெய்டனாக வீசினாலே அது அதிசயம் தான். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே நம் இந்திய அணியைச் சேர்ந்த பாபு நட்கர்னி என்ற வீரர் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை டெஸ்ட் போட்டியில் வீசி உலக சாதனை படைத்தார். அவரைப்பற்றி இங்கு காணலாம்.
பாபு நட்கர்னி இடதுகை சுழல் பந்து வீச்சாளரான இவர் 1951 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடத் துவங்கினார். பின் இரண்டு வருடம் கழித்து தனது முதல் சதத்தினை மும்பை அணிக்கு எதிராக பதிவு செய்தார். அந்த போட்டியில் அவர் 103 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல் கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணியில் 1955 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். ஆல் ரவுண்டரான இவர் 68 ரன்கள் குவித்தார் ஆனால் 57 ஓவர்கள் பந்து வீசிய அவரால் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. இதனால் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்1961 ஆம் ஆண்டு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு. அந்த தொடரில் கான்பூரில் 32 ஓவர்களில் 24 மெய்டன் ஓவரும், டெல்லியில் 34 ஓவர்களில் 24 மெய்டன் மற்றும் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
தொடர்ந்து 21 மேய்டன் ஓவர் !!!!
1964-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் இந்த சாதனையை நிகழ்த்தினார் நட்கர்னி. அந்த போட்டியில் 32 ஓவர்கள் பந்து வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 27 மெய்டன் ஓவர்களை வீசினார். இதில் 21 மெய்டன் ஓவர்கள் தொடர்ச்சியாக வீசப்பட்டது. இதன் மூலம் புதிய உலக சாதனையை படைத்தார் நட்கர்னி. அதாவது தொடர்ச்சியாக 131 பந்துகள் ரன் எதுவும் விட்டுக் கொடுக்காமல் வீசியுள்ளார். இந்த சாதனையை இன்றளவும் எந்தவொரு வீரராளும் முறியடிக்க முடியவில்லை.
இதன் பின்னர் நட்கர்னி சென்னையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ்ல் 6 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸ்ல் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
192 முதல்தர போட்டிகள் விளையாடியுள்ள இவர் 8880 ரன்களும் 500 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.