இந்திய கிரிக்கெட் வாரியம் - இந்திய வேக பந்து வீச்சாளர் முகமத் ஷமிக்கு வெறும் 15 ஓவர்கள் மட்டுமே பந்து வீசக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
முகமத் ஷமி இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர். இந்திய அணிக்காக டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் முகமத் ஷமியின் உடல் நிலையில் அக்கறை செலுத்தியுள்ளது.இந்தியாவில் ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. மொத்தம் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றன.
25க்கும் மேற்பட்ட போட்டிகள் முடிவடைந்து உள்ளன. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி வங்காள அணி கேரளா அணியை எதிர்கொள்ள உள்ளது.
தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் இந்திய வேக பந்துவீச்சாளர் முகமத் ஷமி வங்காள அணிக்காக விளையாட இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர்க்காக முகமத் ஷமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.வருகின்ற டிசம்பர் மாதம் 06 ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் முகமத் ஷமி ரஞ்சி போட்டியில் அதிக நேரம் பந்து வீசி அவர் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டால் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை அவர் இழப்பார்.அது மட்டுமின்றி, இந்திய அணிக்கு வேக பந்துவீச்சாளரின் சேவை கண்டிப்பாக வெளிநாட்டு தொடர்களில் தேவை. அதுவும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணிக்கு வேக பந்துவீச்சு மிகவும் அவசியம்.
அதனால், இந்தியா கிரிக்கெட் வாரியம் வேக பந்து வீச்சாளர் முகமத் ஷமிக்கு ரஞ்சி போட்டியில் ஒரு இன்னிங்ஸ்க்கு வெறும் 15 ஓவர்கள் மட்டுமே பந்து வீச அனுமதி அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் வங்காள அணி மேலாண்மைக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளது.ரஞ்சி போட்டி முடியும் வரை முகமத் ஷமியின் உடல்நிலை அறிக்கையைத் தினமும் வங்காள அணி மேலாண்மை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது.
இதை குறித்து வங்காள அணி தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், முகமத் ஷமி வங்காள அணிக்காக விளையாடுவதை வரவேற்கிறேன். முகமத் ஷமி விளையாடுவது அணிக்குப் பெரும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, முகமத் ஷமி 15 ஓவர்கள் பந்து வீச அனுமதி அளித்து இருப்பது மிகவும் அதிகம். அவர் 15 ஓவர்கள் பந்து வீசும் அவசியம் தேவைப்படாது எனவும் கூறியுள்ளார்.
மாநிலத்துக்காக விளையாடுவதா? அல்லது இந்திய அணிக்காக விளையாடுவதா? என்று வந்தால் இந்திய அணிக்காக விளையாடுவது தான் முக்கியம் என மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டிற்கு மரியாதை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்காள அணி வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி கேரளா அணிக்கு எதிராக விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.