ப்ரித்வி ஷா அணியிலிருந்து விடுவிப்பு, ஹார்திக் பாண்டியா மற்றும் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ப்ரித்வி ஷா
ப்ரித்வி ஷா

ப்ரித்வி ஷா ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முற்படும்போது தனது கணுக்காலை சுழற்றிக் காயம் அடைந்தார். முதல் ஓரிரு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது பிசிசிஐ தேர்வு குழு, அவர் காயத்திலிருந்து மீள தவறியதால் அணியிலிருந்து விடுவித்துள்ளது. அவருக்கு பதிலாக இந்தியா “ஏ” அணியில் கலக்கிவரும் கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ப்ரித்வி ஷா காயத்திலிருந்து மெதுவாக மீண்டு வருகிறார். உடல்கூறு ஆய்வுகளுக்குப் பின் விளையாட தகுதி பெற்றவுடன், அனேகமாக மீதமுள்ள போட்டிகளில் அவரை களம் காணலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதைப் பற்றி சாஸ்திரி கூறியதாவது “ஷாவின் காயம், என்னை மனமுடைய செய்தது, நல்ல விஷயம் என்னவென்றால் அவர் விரைவில் குணமாகி வருகிறார். தானாக நடக்கவும் செய்கிறார். வார இறுதியில் அவரை ஓட வைத்தால் போட்டிகளில் ஆட தகுதி பெறுவார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார் ரவி சாஸ்திரி.

ஒரு வானொலிக்கு பேட்டி அளித்திருந்த ரவிசாஸ்திரி கூறியதாவது “ஷாவிடம் இளமை உள்ளதால் அவர் கூடிய விரைவில் குணமடைய கூடும்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மயங்க் அகர்வால் உள்ளூர் போட்டிகளில் சிம்மசொப்பனமாக விளங்குபவர். இந்தியா “ஏ” அணியில் இடம் பெற்று ரன்களை விளாசி வருகிறார். கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் முதன்முதலாக இந்திய அணியில் இடம்பெற்றார் அகர்வால். ஆனால் ஒரு போட்டி கூட அவருக்கு கிடைக்கவில்லை. இந்த தொடருக்கு முன் ரன்களை விளாசி தள்ளியிருந்த அகர்வாலை அணியில் இடம்பெற செய்யாதது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது.

ஐக்கிய அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாதியிலேயே இடுப்பில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் மைதானத்திற்குள் ஸ்ட்ரெச்சர் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஹார்திக் பாண்டியா. அதன்பின் நீண்ட ஓய்வில் இருந்த பாண்டியா, ஆசிய கோப்பைக்கு பின் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. பின்பு கடந்த வாரம் மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் கலந்துகொண்டார் பாண்டியா. தனது உடல் தகுதியை ரஞ்சி போட்டியின் மூலம் உறுதிப்படுத்துமாறு பிசிசிஐ பாண்டியாவை கேட்டுக்கொண்டிருந்தது. பரோடாவை சேர்ந்த பாண்டியா மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்து விக்கெட்டுகளை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, பாண்டியாவின் உழைப்புக்கு மதிப்பிட்டு இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வைத்துள்ளது இந்திய தேர்வு குழு. இவரின் வருகை இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மும்பைக்கு எதிரான போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பரோடா கேப்டன் கெதர் தேவதர் “பாண்டியா அடுத்த ரஞ்சி போட்டியில் பங்கேற்க மாட்டார், அவர் இந்திய அணியில் இடம்பெற ஆஸ்திரேலியா செல்ல உள்ளார்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது:

“இந்திய தேர்வு குழு, ஹார்திக் பாண்டியா மற்றும் மயங்க் அகர்வாலை சிட்னி மற்றும் மெல்போர்னில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்துள்ளது”

இதுகுறித்து பிசிசிஐ பதிவிட்ட ட்வீட் :

மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல் ராகுல், மாயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), பார்திவ் பட்டேல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குலதீப் யாதவ், ஹார்திக் பாண்டியா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ராஹ், புவனேஸ்வர் குமார்.

Quick Links

App download animated image Get the free App now