ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அடுத்து நடந்த டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் ரோகித் ஷர்மா சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியடைந்தது.
இதற்கிடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்காக ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலை அணியிலிருந்து நீக்கியது பிசிசிஐ. நாளை அடிலெய்ட் மைதானத்தில் இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில், நீக்கப்பட்ட இரு வீரர்களுக்கும் மாற்றாக தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் மற்றும் இளம் வீரர் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளது தேர்வு கமிட்டி. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நாளை நடைபெறவுள்ள போட்டியிலேயே விஜய் சங்கர் அணியில் சேர்ந்து கொள்வார் என்றும் அடுத்து வரவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டியின் போது சுப்மன் கில் அணியில் சேர்ந்து கொள்வார் என்றும் தேர்வு கமிட்டி கூறியுள்ளது.
அணியில் தேர்வானது குறித்து விஜய் சங்கர் கூறுகையில், "உடலளவிலும் மனதளவிலும் முன்பை விட தற்போது வலிமையாக இருக்கிறேன். என் திறமை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. இந்திய அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய ஆவலாக உள்ளேன். ஆஸ்திரேலியாவிற்கு இதுவே எனது முதல் பயணம். மகிழ்ச்சியாக உள்ளது. சில வருடங்களுக்கு முன் இந்திய A அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்ற போது காயத்தால் செல்ல முடியாமல் போனது" என்றார்.
இந்திய அணியில் தான் மறுபடியும் இடம் பெற்றதற்கு இரண்டு விஷயங்களை முக்கியமானதாக கருதுகிறார் விஜய் சங்கர். ஒன்று, உன்னையே நீ நெருக்கடிக்கு உள்ளாக்காமல் கிரிக்கெட்டை அணுபவித்து விளையாடு என்று அவரின் சென்னை பயிற்சியாளர் பாலாஜி கொடுத்த அறிவுரை மனதளவில் உத்வேகத்தை கொடுக்க கூடியதாக இருந்தது. இரண்டாவதாக, நியூசிலாந்து A அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, என் மேல் நம்பிக்கை வைத்து கடினமான சேஷிங்கில் ஐந்தாவது வீரராக களம் இறக்கினார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
"டிராவிட் ஸார் என்னை ஐந்தாவதாக களம் இறக்கியது மிகுந்த உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருந்தது. என்னை முழுமையாக வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கினார்" என்கிறார் விஜய் சங்கர். அந்த ஆட்டத்தில் 87 ரன்கள் அடித்து இந்திய A அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் சங்கர். பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் ஜொலிக்க கூடியவர் விஜய். மித வேகப் பந்துவீச்சாளராக இருந்த போதும், சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்வதோடு தனது உயரம் மற்றும் உயரிய கை அசைவின் மூலம் பவுன்சரும் போடக் கூடியவர். இது ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பிட்சுகளுக்கு உகந்ததாக இருக்கும்.
மற்றொரு வீரரான சுப்மன் கில், இதுவரை எந்த ஒரு நாள் போட்டியிலும் விளையாடிய அணுபவம் இல்லாதவர். 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற அணியில் விளையாடிய கில், இந்த வருட ரஞ்சி டிராபியில் இரு சதம் மற்றும் ஐந்து அரை சதம் உள்பட 782 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.