2018-ஆம் ஆண்டில், கிரிக்கெட் போட்டியில் பல வெற்றி, தோல்வி மற்றும் தனி நபர் சாதனைகள் போன்றவற்றை பார்த்திருப்போம். இந்த ஆண்டிற்கான 11 பேர் கொண்ட சிறந்த ஒருநாள் அணியை பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்தாண்டின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 11 சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியானது 5 பேட்ஸ்மேன்கள், 4 பவுலர்கள், 1 ஆல்ரவுண்டர் மற்றும் 1 விக்கெட் கீப்பரை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொழுது 5 பேட்ஸ்மேன்களில் ஒருவர் 6 ஆவது பவுலராகவும் செயல்படலாம்.
#1 ரோகித் ஷர்மா :
துவக்கவீரர்களில் இந்த ஆண்டு சிறந்து விளங்கியவர் ரோகித் ஷர்மா, தென்னாப்பிரிக்கா தொடரில் சொதப்பினாலும் பின்பு நடைபெற்ற இங்கிலாந்து தொடர், ஆசியக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் பல ரன்களை குவித்துள்ளார்.
இந்த ஆண்டில், 19 போட்டிகளில் பங்கேற்ற இவர் 1030 ரன்களை சேர்த்துள்ளார். சராசரி 73.57 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 100.10 ஆகும். இந்த ஆண்டில் 3 அரைசதங்கள் அடித்துள்ள ரோகித் ஷர்மா, 5 சதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்சம் 162 ஆகும். நல்ல பார்மில் உள்ள ரோகித் ஷர்மா அணியில் முதல் துவக்க வீரராக தேர்வாகிறார்.
#2 ஷிகர் தவான்:
அணியின் இரண்டாம் துவக்கவீரர்களில் ராய், தமிம் இக்பால் மற்றும் பேர்ஸ்டோ போன்ற வீரர்கள் இந்தாண்டு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் அவர்களை விட தவான் கடினமான சூழ்நிலைகளில் ரன்களை குவித்ததன் மூலம் அணியின் இரண்டாவது துவக்க வீரராக தேர்வாகிறார்.
இந்த ஆண்டில், 19 போட்டிகளில் பங்கேற்ற இவர் 897 ரன்களை சேர்த்துள்ளார். சராசரி 49.83 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 102.28 ஆகும். இந்த ஆண்டில் 2 அரைசதங்கள் அடித்துள்ள இவர், 3 சதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்சம் 127 ஆகும். தவான் இரண்டாவது துவக்க வீரராக இருப்பதால் ரோகித் - தவான் இந்த அணியின் துவக்க வீரர்கள்.
#3 விராட் கோலி:
எந்த வித போட்டியுமின்றி அணியில் மூன்றாவது பேட்ஸ்மேனாக தேர்வாகிறார் விராட் கோலி. தனது சீரான ஆட்டத்தின் மூலம் அணிக்கு பலம் சேர்க்கும் இவரே தற்பொழுது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்.
இந்த ஆண்டில், 14 போட்டிகளில் பங்கேற்ற இவர் 1202 ரன்களை சேர்த்துள்ளார். சராசரி 133.56 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 102.56 ஆகும். இந்த ஆண்டில் 3 அரைசதங்கள் அடித்துள்ள இவர் 6 சதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்சம் 160* ஆகும்.
ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற இந்த ஆண்டின் ஆசியகோப்பையில் காயம் காரணமாக கோலி பங்கேற்கவில்லை என்பது குறப்படத்தக்கது.
#4 ஜோ ரூட்:
அணியின் நான்காவது வீரராக தேர்வாகிறார் ஜோ ரூட். ஆம் டெய்லர், ராயுடு மற்றும் ரஹீம் போன்ற வீரர்கள் இருந்தாலும் ரூட் கடினமான சூழ்நிலைகளில் பல ரன்களை சேர்த்துள்ளார். குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 3 போட்டிகளில் இரண்டு சதம் விளாசி இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இந்த ஆண்டில், 24 போட்டிகளில் பங்கேற்ற இவர் 946 ரன்களை சேர்த்துள்ளார். சராசரி 59.13 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 83.94 ஆகும். இந்த ஆண்டில் 5 அரைசதங்கள் அடித்துள்ள இவர் 3 சதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்சம் 113* ஆகும். இவர் அணியின் 6 ஆவது பவுலராக செயல்படுவது அணிக்கு கூடுதல் பலமே.