இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஆண்டாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பந்துவீச்சு, பேட்டிங், என இரண்டிலும் வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் புது புது சாதனை படைத்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளின் மூலம் தேசிய அளவில் அணியில் இடம்பெறுகின்றனர். இந்த ஆண்டு ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் அறிமுக வீரர்களாக பல வீரர்கள் விளையாடியுள்ளனர். அறிமுக வீரர்களில் சிலர் இந்த ஆண்டு மிக சிறப்பாக விளையாடியுள்ளனர்.
# 5 ஓஷேன் தாமஸ் (வெஸ்ட் இண்டீஸ்)
21 வயதே ஆன வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் அறிமுகமானார். முதல் விக்கெட்டாக ஷிகர் தவானை வீழ்த்தினார். இந்த ஆண்டு 4 போட்டிகளில் 6 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 என அனைத்து வித போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பந்து வீச்சாளராக வலம்வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.
# 4 ஆண்ட்ரூ டை (ஆஸ்திரேலியா)
ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் அறிமுகமான ஆண்ட்ரூ டை அந்த தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய பந்து வீச்சாளராக ஆண்ட்ரூ டை இருந்து வருகிறார். டி20 போட்டிகளில் 2015-ஆம் ஆண்டு அறிமுகமான இவர் ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளார். கடந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்கு விளையாடிய இவர் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இந்த ஆண்டு 7 போட்டிகளில் 12 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
# 3 கலீல் அகமது (இந்தியா)
இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் அறிமுகமான கலீல் அகமது ஹாங்காங் அணியுடன் முதல் போட்டியில் 3 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்க்கு அடுத்து வரும் காலங்களில் இந்திய அணிக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இவர் சிறந்து விளங்குவார். ரோஹித் ஷர்மா தலைமையில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இவர் டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். 6 போட்டிகளில் 11 விக்கெட்கள், 5.05 எகானமி ரேட், 13 ரன்களுக்கு 3 விக்கெட்கள் எடுத்தது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. 2019-ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
# 2 லுங்கி ங்கிடி (தென் ஆப்பிரிக்கா)
தென் ஆப்பிரிக்கா அணியின் லுங்கி ங்கிடி சிறந்த பந்து வீச்சாளராக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தற்போது இருந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியுடன் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளார். இந்த தொடரில் 4 போட்டிகளில் 8 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம்பெற்று இருந்தார். இந்த ஆண்டு 13 போட்டிகளில் 26 விக்கெட்கள், 5.56 எகானமி ரேட் கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். அதே போல் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். 2019- ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கிய வீரராக இருப்பார்.
# 1 ஷஹீன் அஃப்ரிடி (பாகிஸ்தான்)
18 வயதே ஆன பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷஹீன் அஃப்ரிடி இந்த வருடம் ஆசிய கோப்பையில் அறிமுகமானார். 3 போட்டிகளில் 4 விக்கெட்கள், 4.88 எகானமி ரேட் கொண்டு முதல் தொடரிலேயே அசத்தியுள்ளார். இந்த வருடம் 6 ஒருநாள் போட்டிகளில் 13 விக்கெட்கள், 4.89 எகானமி ரேட், 38 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்தது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. அதே போல 7 டி20 போட்டிகளில் 11 விக்கெட்கள், 7. 80 எகானமி ரேட் கொண்டு சிறப்பாக பந்து வீசியுள்ளார். நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இவர் சிறப்பாக பந்து வீசியிருந்தார். பாகிஸ்தான் அணிக்கு வரும் காலங்களில் வாசிம் அக்ரம் போன்று சிறந்த பந்து வீச்சாளராக வலம் வருவார்.