விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருந்தது. அதேசமயத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சாதரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது கரேபியன் அணி. இந்திய அணி இதனை கவனத்தில் கொண்டு மிகவும் நுணுக்கமாக செயல்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்சில் இந்திய அணியை 297 ரன்களுக்கு சுருட்டி அருமையான தொடக்கத்தை அளித்தது. ஆனால் அதன்பின் போட்டி இந்தியா வசம் மாறியது. மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்சில் 222 ரன்களில் சுருண்டு 75 ரன்கள் பின்னடைவில் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துனைக்கேப்டன் ரகானே, ஹனுமா விகாரி ஆகியோரது அரைசதம் மூலமாக இந்திய அணி 347 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு 419 என்ற சற்று கடின இலக்கு இந்தியாவால் நிர்ணயிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது இன்னிங்சில் கடுமையாக சொதப்பி 100 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை கரேபியன் பேட்ஸ்மேன்களாள் அவ்வளவு எளிதில் எதிர்கொள்ள இயலவில்லை. இந்த அணியின் பாதி வீரர்கள் 15 ரன்களுக்குள் பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் 50 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை மேற்கிந்தியத் தீவுகள் இழந்தது. மிகுவல் கம்மின்ஸ் மற்றும் கெமர் ரோச் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகள் 100 ரன்களை எட்டியது.
இந்த இன்னிங்ஸின் நாயகனான பூம்ரா 7 ரன்கள் மட்டுமே அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடன் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் 318 ரன் வித்தியாச வெற்றியே அந்நிய மண்ணில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும்.
இந்த வெற்றியின் மூலம் கேப்டன் விராட் கோலியும் சாதனை புத்தகத்தில் இனைந்துள்ளார். அந்நிய மண்ணில் கேப்டனாக 12வது வெற்றியை ருசித்த விராட் கோலி, வெளிநாட்டு மண்ணில் சிறந்த இந்திய டெஸ்ட கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அந்நிய மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை குவித்த இந்திய டெஸ்ட் கேப்டன்களில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன் சவ்ரவ் கங்குலி அந்நிய மண்ணில் 11 டெஸ்ட் வெற்றிகளை குவித்து முதலிடத்தில் இருந்தார். விராட் கோலி தற்போது அந்நிய மண்ணில் சவ்ரவ் கங்குலியின் சிறந்த கேப்டன்ஷீப் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி அந்நிய மண்ணில் 26 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி 12ல் வெற்றி கண்டுள்ளார். வெளிநாட்டு மண்ணில் நடந்த சர்வதேச டெஸ்டில் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி 6 வெற்றிகளையும், ராகுல் டிராவிட் 5 வெற்றிகளையும் குவித்து இப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடத்தை வகிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக கேப்டனாக விராட் கோலியின் 26வது டெஸ்ட் வெற்றியாகும். இதன்மூலம் அதிக டெஸ்ட் வெற்றிகளை குவித்த இந்திய கேப்டனான மகேந்திர சிங் தோனியின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.