பொதுவாக 20 ஓவர் போட்டி என்றாலே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவார்கள். வெறும் 20 ஓவர்கள் என்பதால் தனது விக்கெட்டை இழந்தாலும் பரவாயில்லை, அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்து பேட்ஸ்மேன்களும் களம் இறங்குவார்கள். பொதுவாக டி20 போட்டிகளின் வெற்றியில் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பை விட, பந்து வீச்சாளர்களின் சிறப்பான விளையாட்டு தான் முக்கியம்.
அதற்கு காரணம் ஒரு அணி அதிக ரன்களை அடித்தாலும், குறைவான ரன்களை அடித்தாலும் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்துவதன் மூலம் தான் அந்த அணி வெற்றி பெற முடியும். அடித்து விளையாடும் பேட்ஸ்மேன்களின் மத்தியில், ஒரு ஓவரை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் குறிப்பாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு தான் முக்கியம். ஏனெனில் சுழற்பந்து வீச்சாளர்களால் மட்டும்தான், பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எளிதில் எடுக்க முடியும். இவ்வாறு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சிறப்பாக பந்துவீசிய இளம் பந்து வீச்சாளர்களின் பட்டியலை இங்கு காண்போம்.
#1) ரஷித் கான்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆவார். இவருக்கு தற்போது 20 வயதை கூட தாண்டவில்லை. ஆனால் இந்த குறைந்த வயதிலேயே உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் தான். கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி பலரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்தார்.
பொதுவாக 20 ஓவர் போட்டிகளில் டெத் ஓவர்களில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பார்கள். ஆனால் சுழற்பந்து மூலமும் டெத் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த முடியும் என்று தனது திறமையின் மூலம் நிரூபித்துள்ளார் ரஷித் கான். இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இவர் மொத்தம் 17 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
#2) மயான்க் மார்கண்டே
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய இளம் சுழற்பந்து வீச்சாளரான மயான்க் மார்க்கண்டே. இவர் கடந்த ஆண்டுதான் முதன் முதலாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அறிமுகமான முதல் வருடத்திலேயே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் போல் சிறப்பாக பந்துவீசினார். இவர் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் . இவரது சிறப்பான பந்துவீச்சின் மூலம், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் மார்க்கண்டே.
#3) ஜோப்ரா ஆர்ச்சர்
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். ராஜஸ்தான் அணியில் சிறந்த டெத் பவுலர்கள் இல்லாமல் திணறியது. அந்த சூழ்நிலையில் இவர்தான் அந்த இடத்தை நிரப்பினார். இந்த இளம் வயதிலேயே டெத் ஓவர்களில் பந்துவீசும் அளவிற்கு வளர்ந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் மொத்தம் 10 போட்டிகளில் விளையாடி, 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.