2019 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி மிகப் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதன்படி, தலைமை பயிற்சியாளர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்து பிசிசிஐ. பல ஆயிரம் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தது முதற்கட்டமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேரை இறுதி பட்டியலிட்டது, பிசிசிஐ. அவர்களிடம் நடத்திய நேர்காணலின் படி, மீண்டும் ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக 2021ஆம் ஆண்டு வரை நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள், பிசியோ, நிர்வாக மேலாளர் என மீதமிருக்கும் பணியிடங்களுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்க ஆயத்தம் ஆகியது, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு கமிட்டி. மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கமிட்டி கூட்டத்தில் மேற்கண்ட பதவிகளுக்கான நேர்காணல் முடிவடைந்தது. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இந்த நேர்காணலில் 14 பேட்டிங் பயிற்சியாளர்கள், 12 பவுலிங் பயிற்சியாளர்கள், 9 பீல்டிங் பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் வீரர்கள் இந்த வீடியோ கான்பிரன்ஸ் மூலமும் இந்த நேர்காணலில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக நேற்றுடன் அனைத்து நேர்காணல்களும் முடிவடைந்தன.
இந்த நேர்காணலின் முடிவு படி இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக உள்ள பரத் அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நீடிப்பார்கள் எனவும் தெரியவந்துள்ளது. பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பாங்கர் மட்டுமே தற்போது அணியிலிருந்து விலக உள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினரான விக்ரம் ரத்தோர் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வரை சந்திப் பாட்டில் தலைமையிலான இந்திய தேர்வு குழு கமிட்டியின் உறுப்பினராக விக்ரம் ரத்தோர் இருந்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக திகழ்ந்து வந்த சஞ்சய் பாங்கர் தமது பணியை முடிக்க உள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்திய அணியின் பிசியோவாக நிதின் படேல் மீண்டும் திரும்பியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை தொடரை வென்று இருந்தபோது அப்போதைய ஃபிஸியோவாகவும் இவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பொறுப்புகளை தவிர, இந்திய அணியின் புதிய நிர்வாக மேலாளராக கிறிஸ் தோங்ரே நியமிக்கப்பட்டுள்ளார். கண்டிஷனிங் கோச் உள்ளிட்ட இரு பதவிகளுக்கு அனுபவ திறமைகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட நேர்காணலை நடத்துவதாக தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
மேற்கண்ட பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளவர்கள் அனைவரும் ஈராண்டு காலங்களுக்கு இந்திய அணியில் தங்களது பணியை தொடருவார்கள். நடப்பான்டில் துவங்கவுள்ள ஃப்ரீடம் சீரியஸ் தொடர் முதல் 2021ஆம் ஆண்டு நடைபெறும் சர்வதேச டி20 உலக கோப்பை வரை இவர்கள் அனைவரும் இந்திய அணியில் நீடிப்பார்கள். மேற்கண்ட பதவிகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட அனைவருக்கும் பணி ஆணையை வழங்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.