நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 5-வது ஓவரை வீச வந்த ஒரு புவனேஸ்வர் குமார் 4 பந்துகளை வீசி வேளையில் இடது காலின் தொடை பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இருப்பினும், நேற்றைய போட்டியில் தற்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ரோஹித் சர்மாவின் சதத்தின் உதவியுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்து இருந்தது. அதன் பின்னர், களமிறங்கிய பாகிஸ்தான் 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதற்கடுத்து மழை வந்து ஆட்டத்தை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தப்பட்டது.
இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஏற்பட தசைப்பிடிப்பு காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் அவரது ஓவரை பூர்த்தி செய்தார். ஐந்தாவது ஓவரின் 5வது பந்தில் வீச முற்பட்ட விஜய் சங்கரின் முதல் பந்திலேயே விக்கெட் கிடைத்தது. இந்திய அணியின் அடுத்த இரு ஆட்டங்களான ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதற்கடுத்து விளையாடும் பலம் மிகுந்த இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ள போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை என்றால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான்.
நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு புவனேஸ்வர் குமாரின் காயத்தை பற்றி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டி ஒன்றில்,
"பந்துவீச வந்தபோது தவறாக காலை வைத்ததனால் ஏற்பட்ட விளைவுதான் இந்தப் பிடிப்பு. இதை பெரிதாக எடுத்துக் கொள்ள அவசியமில்லை. அவருக்கு சில காலம் ஓய்வு அளிக்க விரும்புகிறோம். இன்னும் சில போட்டிகளுக்கு பின்னர், அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம். ஒருவேளை அப்படி இல்லை என்றால், அதிகபட்சமாக மூன்று போட்டிகள் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இவர் இந்திய அணியின் முக்கிய காரணியாக விளங்குவதால் விரைவிலேயே குணமடைவார் என நம்புகிறோம் எங்களுக்கு தற்போது முகமது சமி தயாராக உள்ளார். எனவே, நாங்கள் இது போன்ற சூழ்நிலைகளை பெரிதும் கவலைப்படுவதில்லை. பந்துவீச்சாளர்கள் தமது பொறுப்பினை அருமையாக செய்து இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். சிறிது காலம் ஓய்வுக்கு பின்னர், அவர் நிச்சயம் குணமடைவார்"
என்றார்.
நேற்றைய போட்டியில் 140 ரன்களை குவித்த ரோஹித் சர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் 50 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த நான்காவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதுமட்டுமல்லாது, ராகுலுடன் இணைந்து 136 ரன்களை முதல் விக்கெட்டை பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கினார், ரோகித் சர்மா.