ஐபிஎல் தொடரை பொறுத்தவரை 8 அணிகள் பங்கேற்கும். இந்த ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் இரண்டு போட்டிகள் மோதும்.
இவ்வாறு அந்த 8 அணிகளிலும் ஒரு முக்கிய அதிரடி வீரர்கள் இருப்பார்கள். அவர்கள்தான் ஐபிஎல் தொடரின் நட்சத்திர நாயகர்களாக திகழ்வார்கள். தங்களது அதிரடியின் மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை படைத்தவர்கள். அந்த அதிரடி வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ரோகித் சர்மா ( மும்பை இந்தியன்ஸ் )
ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த சில வருடங்களாக சிறப்பான முறையில், மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி செல்கிறார். களத்தில் நிலைத்து விட்டால் பின்பு பெரிய இன்னிங்ஸ் ஆட கூடிய திறமை படைத்தவர். மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை, ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை படைத்த ஒரே அதிரடி வீரர் இவர்தான். இவர் இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தம் 173 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 131.02 ஆகும். இவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 184 சிக்ஸர்களை விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) சுரேஷ் ரெய்னா ( சென்னை சூப்பர் கிங்ஸ் )
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா தான். ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ரெய்னா முதல் இடத்தில் இருக்கிறார். இதுவரை இவர் 176 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 138.4 ஆகும்.
#3) ஏபி டிவில்லியர்ஸ் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் )
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர நாயகன் ஏபி டிவில்லியர்ஸ். ஐபிஎல் தொடரின் பல போட்டிகளில் தனி ஒருவராக போராடி பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர் அடிக்க கூடிய திறமை படைத்தவர். எனவேதான் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை MR.360° என்று அழைத்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 150.93 ஆகும். அதுமட்டுமின்றி இவர் மொத்தம் 187 சிக்ஸர்களை விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#4) ஆண்ட்ரே ரசல் ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ் )
கொல்கத்தா அணியின் மிக முக்கியமான வீரர் ஆண்ட்ரே ரசல். கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறிய சூழ்நிலைகளில், தனி ஒருவராக தனது அதிரடியின் மூலம் அணியை சரிவில் இருந்து மீட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ஆண்ட்ரே ரசல். எனவேதான் ஐபிஎல் தொடரில் ஆண்ட்ரே ரசல், மிக ஆபத்தான வீரர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 177.29 ஆகும். குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#5) ரிஷப் பண்ட் ( டெல்லி டேர்டெவில்ஸ் )
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் நட்சத்திர நாயகனாக திகழ்ந்தார் ரிஷப் பண்ட். ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடியதால் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டால், அதன் பிறகு ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
#6) கிறிஸ் கெயில் ( கிங்ஸ் லெவன் பஞ்சாப் )
ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அதிரடி வீரர்களில் ஒருவர் கிறிஸ் கெயில். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில், எந்த அணியும் இவரை முன்வந்து எடுக்கவில்லை. இறுதியாக பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் மொத்தம் 6 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 150.71 ஆகும்.
#7) ஜாஸ் பட்லர் ( ராஜஸ்தான் ராயல்ஸ் )
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரராக வலம் வந்தார் ஜாஸ் பட்லர். கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகளில் முதல் ஒரு சில போட்டிகளில் பட்லர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக தான் விளையாடினார். அதன்பின்பு தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய பட்லர், தொடர்ந்து அதிரடியாய் அரை சதங்களை விளாசினார்.
#8) டேவிட் வார்னர் ( சன்ரைசர்ஸ் ஹைதராபாத் )
டேவிட் வார்னர் அதிரடிக்கு பெயர் போனவர். ஹைதராபாத் அணியில், அனைத்து போட்டிகளிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்துள்ளார். ஆனால் கடந்த வருடம் இவர் ஹைதராபாத் அணியில் விளையாடவில்லை. அவர் செய்த தவறுகள் காரணமாக, கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஒரு வருடம் விளையாட தடை விதித்தது. தற்போது அந்த தடை காலம் முடிந்ததால், இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார்.