இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. அடுத்ததாக தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் அதனை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜேசன் ஹோல்டர்' கேப்டனாக வழி நடத்த உள்ள இந்த 13 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு வீரர் தற்போது இடம் பெற்றுள்ளார். அவர் தான் 'ரக்கீம் கார்ன்வால்'. வலதுகை சுழற்பந்து வீச்சு, மற்றும் வலது கை அதிரடி பேட்டிங் ஆல்-ரவுண்டரான இவரைப் பற்றி சொல்ல வேண்டிய ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இவரது உயரம் 6 அடி 6 அங்குலம். மேலும் இவரது எடை சுமார் 140 கிலோ.
இன்னும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்காத 'கார்ன்வால்' இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தனது சிறப்பான ஆட்டத்தால் திறப்பது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தர போட்டியில் அறிமுகமான இந்த 26 வயது வீரர் இதுவரை 55 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 23.90 என்ற சராசரியில் 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய இவர் முதல் தரப் போட்டிகளில் 13 அரை சதங்களும், ஒரு சதமும் விளாசியுள்ளார். சமீபத்தில் இந்தியா-ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ்-ஏ அணிக்காக களம் இறங்கிய இவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக தற்போது முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது தேர்வு குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ஹேயின்ஸ் கூறுகையில்,
"கார்ன்வால் சிறப்பான நிலையான ஆட்டத்தை நீண்ட காலமாக அளித்து வருகிறார். மேட்ச் பின்னரான இவர் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவர் தனது அபாரமான சுழற்சி மற்றும் அதிக பவுன்ஸ் மூலம் எங்கள் அணியின் பந்து வீச்சிற்கு வலு சேர்ப்பார் என நம்புகிறோம். மேலும் இறுதி கட்டத்தில் பேட்டிங்கிலும் சிறப்பாக கை கொடுக்க கூடியவர் இவர். எனவே இவரிடம் இருந்து சிறப்பான ஒரு ஆட்டத்தை இந்த தொடரில் எதிர்பார்க்கலாம்".
13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி விபரம்.
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரெய்க் ப்ரேத்வைட், டேரன் பிராவோ, ஷமரா ப்ரூக்ஸ், ஜான் கேம்பெல், ராஸ்டன் சேஸ், ரக்கீம் கார்ன்வால், ஷேன் டாவ்ரிச், ஷனன் கேப்ரியல், ஷிமான் ஹெட்மயர், ஷாய் ஹோப், கீமார் ரோச், கீமோ பாவல்.
இரு அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற உள்ளது.