ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசன் தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கப் போகும் எட்டு அணிகளிலும் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களது உச்சபட்ச திறனை வெளிக்கொணர்ந்து தங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய முயல்வர்.
டெல்லி நகரை மையமாக கொண்ட டெல்லி டேர்டெவில்ஸ் சமீபத்தில் தங்களது பெயரை "டெல்லி கேப்பிடல்ஸ்" என மாற்றியுள்ளது. பெயரில் மாற்றம் கொண்டு வந்தது மட்டுமல்லாது அணியில் உள்ள வீரர்களிலும் மாற்றங்களைக் கொண்டுவந்து ஒரு இளம் அணியாக உருவெடுத்துள்ளது. இளம் கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் அணியை வழி நடத்த உள்ளார். மேலும், இந்த இளம் அணியை வெற்றி பெற செய்யும் மூன்று சிறந்த வீரர்களை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
#1.ப்ரித்வி ஷா
19 வயதான மும்பையைச் சேர்ந்த பிரித்திவி ஷா கடந்த ஆண்டு இந்த அணிக்காக விளையாடி கடும் தாக்கத்தை ஏற்படுத்தினார். குறைந்த அளவே இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்தார்.
மேலும் கடந்த ஆண்டு "டெல்லி டேர்டெவில்ஸ்" அணியில் விளையாடியதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி வெறும் மூன்று இன்னிங்சில் விளையாடிய இவர், 237 ரன்களை குவித்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டு ஐபிஎல்-லில் நிச்சயம் இவர் ஷிகர் தவான் உடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்க உள்ளார். டெல்லி அணியின் மிகச்சிறந்த தேடலில் இவரும் ஒருவர். இவர் ஆட்டபோக்கை மாற்றி அணிக்கு வெற்றியை தேடித்தரும் வீரராவார். ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக சற்று ஓய்வில் இருந்த இவர், தற்போது புது தெம்புடன் ஐபிஎல் தொடரில் களம் காண உள்ளார் .இவரின் ஆட்டம் நிச்சயம் டெல்லி அணியின் வெற்றிக்கு பெரிதளவில் உதவும் என எதிர்பார்க்கலாம்
#2.ரிஷப் பண்ட்
இந்திய அணிக்கு சமீப காலங்களில் கிடைத்துள்ள ஒரு மிகச் சிறந்த இளம் விக்கெட் கீப்பர், ரிஷப் பண்ட். இவர் விளையாடியுள்ள 38 ஐபிஎல் போட்டிகளில் இதுவரை ஒரு சதமும் 8 அரைச்சதங்களையும் குவித்து, தான் ஒரு ஆக்ரோஷமான ஆட்டக்காரர் என பலமுறை நிரூபித்துள்ளார். நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் இவரது விக்கெட் கீப்பிங் பணி பெரிதும் எடுபட்டது. கடந்தகால ஐபிஎல் தொடர்களில் அரக்கத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், இந்த ஐபிஎல் தொடரிலும் அதே பாணியை கடைபிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடைபெறும் உலக கோப்பை தொடரில் இடம் பிடிக்க தனது திறனை கூடுதல் உத்வேகத்துடன் இந்த ஐபிஎல் போட்டிகளில் வெளிப்படுத்துவார். இவரும் டெல்லி அணிக்கு ஒரு மிகச்சிறந்த வெற்றியைத் தேடித் தரக்கூடிய வீரர் ஆவார்.
#3.டிரென்ட் போல்ட்
நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த கால ஐபிஎல் தொடர்களில் ஒரு இன்றியமையாத வீரராக திகழ்ந்து வருகிறார். இந்திய ஆடுகளங்களில் எவ்வாறு பந்து வீசுவது என்பது பற்றிய தெளிவு மற்ற வெளிநாட்டு பந்துவீச்சாளர்களை காட்டிலும் இவருக்கு சற்று அதிகம். தனது பந்துவீச்சில் அவ்வப்போது மாற்றங்களை நிகழ்த்த கூடிய காரணத்தால் டெல்லி அணிக்கு தேவைப்படும் வீரர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார். அதேபோல் ஆட்டத்தின் இறுதிகட்ட நேரங்களில் ரன்களை கட்டுப்படுத்துவதில் வல்லவராகவும் திகழ்கிறார்.
கடந்த சில மாதங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் நியூசிலாந்து அணியில் தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார், டிரென்ட் போல்ட். இதே போக்கை இந்த ஐபிஎல் சீசனிலும் தொடர்ந்தால் நிச்சயம் ஊதா நிற தொப்பியை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இவருக்கு உண்டு. மொத்தத்தில் இவர் சிறப்பாக பந்து வீசினால், டெல்லி அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. டெல்லி அணி நிர்வாகமும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவரது பங்களிப்பை பெரிதும் நம்பியுள்ளது.
எழுத்து: பிரசம் பிரதாப்
மொழியாக்கம்: சே.கலைவாணன்