நடந்தது என்ன?
ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவருமே 2019 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
பிண்ணனி
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தினார். அத்துடன் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.
இந்த அற்புதமான ஆட்டத்தால் அனைவரின் பார்வையையும் தம் பக்கம் இழுத்துள்ளார் ஷங்கர். இதன்மூலம் 2019 இந்திய உலகக் கோப்பை அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பெறுவார் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ஆஷிஷ் நெஹ்ரா புதிதாக இனைந்துள்ளார்.
முழு விவரம்
ஆஷிஷ் நெஹ்ரா, விஜய் சங்கர் பற்றி கூறியதாவது: "விஜய் சங்கர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் இவருது பந்துவீச்சில் சிறிது முன்னேற்றம் தேவைப்படுகிறது. இவருக்கு மேன்மேலும் வாய்ப்பளித்தால் பந்துவீச்சிலும் அசத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
"இவர் கண்டிப்பாக பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும். விஜய் சங்கரால் கண்டிப்பாக முடியும். தற்போது இவரை ஒரு ஆல்-ரவுண்டர் என கூற இயலாது. இவரை 6வது அல்லது 7வது பௌலராக வேண்டுமானால் தற்போது பயன்படுத்தலாம். விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியாவை விட தற்போது சிறந்தவராக இல்லை, ஆனால் விஜய் சங்கர் பந்துவீச்சை மேம்படுத்தினால் கண்டிப்பாக ஹர்திக் பாண்டியாவை விட சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வர அதிக வாய்ப்புள்ளது" என தனியார் தொலைக்காட்சி பேட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகவும், விஜய் சங்கரை 3,4,5,6 ஆகிய ஏதேனும் ஒரு பேட்டிங் வரிசையில் களமிறக்கலாம். விஜய் சங்கர் இக்கட்டான சூழ்நிலையிலும் சிக்ஸரை விளாசும் திறமை உடையவர். அத்துடன் ஐபிஎல் தொடரில் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டையும் சரியாக எதிர்கொண்டு விளையாடியுள்ளார் விஜய் சங்கர். ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள். எனவே இருவருமே 2019 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டும். விஜய் சங்கர் இனிவரும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 8 அன்று ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், நாக்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற விஜய் சங்கரின் மீது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.