கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களை புரட்டியெடுத்து ரன்களை குவிக்க பேட்ஸ்மேன்களை தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும், தங்களது தொடர் முயற்சியால் அத்தகைய பேட்ஸ்மேன்களையே நிலைகுலையச் செய்துவருகிறார்கள், பந்துவீச்சாளர்கள். நிச்சயமாக, கிரிக்கெட் போட்டிகள் வேக பந்துவீச்சாளர்களுக்கு சற்று கடினமான விதிகளை கொண்டுள்ளன. ஏனெனில், இவர்கள் கடும் வேகத்தில் ஓடி தனது துல்லியமான வேகப்பந்து வீச்சு தாக்குதலை வெளிப்படுத்தினால் மட்டுமே பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வெற்றி பெற இயலும். இத்தகைய கடினமான பணியை மேற்கொண்டுள்ளவர்களில் ஒருவரான முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகவேக பந்தினை வீசிய சாதனையை படைத்தவராக விளங்கி வருகிறார். "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிவேக பந்தான மணிக்கு 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார். எனவே, இவரது இத்தகைய சாதனையை முறியடிக்கும் வாய்ப்புள்ள பந்துவீச்சாளர்கள் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#1.மிட்செல் ஸ்டார்க்:
சர்வதேச கிரிக்கெட்டில் தனது யார்க்கர் வகை பந்துவீச்சால் எதிரணியின் பேட்ஸ்மேன்களை கபளீகரம் செய்யும் ஆற்றல் மிக்க வீரர்களில் ஒருவராக மிச்செல் ஸ்டார்க் திகழ்ந்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்தை வீசிய ஐந்தாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். மணிக்கு 100 மைல் வேகத்தில் வந்த வீசும் சாதனையை நூலிழையில் தவற விட்டார், மிட்செல் ஸ்டார்க். அதிகபட்சமாக மணிக்கு 99.68 மைல் வேகத்தில் பந்தை வீசி அதிர்ச்சி அளித்துள்ளார். 2015 உலகக் கோப்பை தொடரிலும் கூட தனது அபாரமாக பந்து வீசி தாக்குதலில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்து "தொடர்நாயகன்" விருதையும் வென்றார். நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் கூட 15 விக்கெட்களை கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார், ஸ்டார்க். எனவே, இவரும் சோயப் அக்தரின் சாதனையை முறியடிக்கும் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
#2.சோப்ரா ஆர்ச்சர்:
2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார், சோப்ரா ஆச்சர். இவரது அபார திறமையால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது நாட்டிற்கு அழைத்து வந்தது. இதன்பேரில், கடந்த மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அறிமுகம் கண்டு சிறப்பாக பங்காற்றியதால் 2019 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து ஆச்சர்யமளித்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் சராசரியாக மணிக்கு 146 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை கலங்கடித்து வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் தனது அதிவேக பந்தாக மணிக்கு 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசியும் உள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிகமாக வீசப்பட்ட 10 பந்துகளில் இடம்பெற்ற 5 இவருடைய பந்துவீச்சில் வீசப்பட்டதாகும். 24 வயதான இவர் விரைவிலேயே சோயப் அக்தரின் அதிவேக சாதனையை முறியடிப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
#3.ககிசோ ரபாடா:
தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா சர்வதேச கிரிக்கெட்டில் கைதேர்ந்த பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார். இவரின் அபார பந்துவீச்சு தாக்குதலால் தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடி சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடம் அரியணைக்கு ஏறினார். இத்தகைய சாதனையை தனது 22ஆவது வயதிலேயே இவர் புரிந்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் குறைந்த வயதிலேயே 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஸ்டென் அமைப்பால் உலகின் சிறந்த இளம் வீரர் என்ற விருதையும் பெற்றார். மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் தமது வேகப்பந்து வீச்சால். எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட டெல்லி அணியில் இடம் பெற்று தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். தொடரில் வீசப்பட்ட பத்து அதிவேக பந்துகளில் ஐந்து இவருடைய பந்துவீச்சால் நிகழ்த்தப்பட்டதாகும். மேலும், மணிக்கு 154.23 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி தொடரின் அதிவேக பந்தினை பதிவு செய்தார். எனவே, இவர் சோயப் அக்தரின் சாதனையை முறியடிக்கும் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.