'பாக்சிங் டே' போட்டி போல் சென்னையில் முன்பு நடைபெற்ற 'பொங்கல்' டெஸ்ட் போட்டி!

சென்னை சேப்பாக்க மைதானம்
சென்னை சேப்பாக்க மைதானம்

இன்னும் மூனு நாள்ல பொங்கல் வரப் போகிறது. பொங்கல் முடிஞ்சதும் வழக்கமா நாம என்ன செய்வோம்? வீட்ல செஞ்ச சக்கர பொங்கல கட்டிகிட்டு நாலஞ்சு கரும்பு துண்டையும் எடுத்துகிட்டு குடும்பத்தோடு மெரினா பீச் போய் அதகளம் செய்வோம். சரி, இதையே கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க. அதே சக்கர பொங்கலோட, கையில கரும்பையும் தூக்கிட்டு பொங்கல் லீவுல குடும்பத்தோட நம்ம சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துல டெஸ்ட் மேட்ச் பாத்தா எப்படி இருக்கும்? சும்மா ஜிவ்வுனு இருக்கும்.

கிறிஸ்துமஸிற்கு அடுத்த நாள் (டிசம்பர் 26) வருடம் தோறும் தவறாமல் 'பாக்சிங் டே' போட்டியை நடத்தி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். இதேப்போல், முப்பது வருடங்களுக்கு முன்பு வரை சென்னையில் நடைபெற்று வந்த பொங்கல் டெஸ்ட் போட்டி இந்திய அணியின் அட்டவணையில் தவறாமல் இடம்பெற்று வந்தது. பொங்கல் விடுமுறையில் விளையாடப்படுவதால் இந்த போட்டிகளுக்கு "பொங்கல் டெஸ்ட் போட்டி" என்ற பெயர் வந்தது.

"பொங்கல் டெஸ்ட் போட்டி" என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படாவிட்டாலும், 1959-60 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில் சுமார் 13 டெஸ்ட் போட்டிகளை சேப்பாக்க மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ளது. ஜனவரி மாதத்தில் சென்னை நகரத்தின் வானிலை அற்புதமாக இருப்பதோடு பொங்கலை முன்னிட்டு பள்ளி, கல்லுரிகளுக்கு ஒரு வார காலம் விடுமுறையும் இருப்பதால் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன.

ரசிகர்களின் கரகோஷத்தில் சேப்பாக்கம் மைதானம்
ரசிகர்களின் கரகோஷத்தில் சேப்பாக்கம் மைதானம்

முதலாவது பொங்கல் டெஸ்ட் போட்டி 1960-ம் ஆண்டில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மில்கா சிங் அறிமுகமானார். ஆனால் இந்திய அணி இந்த போட்டியில் படு மோசமாக தோல்வி அடைந்தது. கடைசி பொங்கல் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியில் கபில் தேவ் செஞ்சுரி அடித்ததோடு இந்திய அணி வெற்றி பெறவும் முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டிக்கு பிறகு பொங்கல் டெஸ்ட் போட்டி நடைபெறவே இல்லை.

சாதாரண நாட்களிலேயே சேப்பாக்க மைதானத்தில் கூட்டம் அலைமோதும். அதுவும் பொங்கல் விடுமுறையில் போட்டியை நடத்தினால் கேட்கவே வேண்டாம். முன்பை போல் மறுபடியும் பொங்கல் டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் சென்னை ரசிகர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்கின்றனர் சென்னை ரசிகர்கள்
வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்கின்றனர் சென்னை ரசிகர்கள்

சென்னை ரசிகர்களை பற்றி உலகமே அறியும். எதிரணியாக இருந்தாலும் அது நல்ல ஷாட்டாக இருந்தால் கை தட்டாமல் இருக்க மாட்டார்கள். இதே மைதானத்தில் இந்திய அணியை வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள் சென்னை ரசிகர்கள். எந்தப் போட்டியும் ரசிகர்களின் பங்கேற்பினால் மட்டுமே சிறப்பானதாக இருக்கும். அதை மெய்பிப்பது போல் சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியை காண வரும் கூட்டம் போல் வேறு எந்த மைதானத்திலும் பார்க்க முடியாது.

முன்பு இந்தியாவில் சென்னை உள்பட ஐந்து பெரிய மைதானங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது பல மைதானங்கள் உள்ளன. அதுவும் இப்போது இந்திய அணியின் போட்டிகள் யாவும் எதிர்கால தொடர்கள் திட்டத்தின் (Future Tours Programme) படி தான் தீர்மாணிக்கப் படுகின்றன. இதன் காரணமாக சுழற்சி முறையில் மட்டுமே மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. ஆகையால் மறுபடியும் பொங்கல் டெஸ்ட் போடி நடைபெறுவதற்கு வாய்ப்பு குறைவே என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு கூட்டம் வர வேண்டுமென்றால் இது போன்ற விடுமுறை காலத்தில் போட்டிகளை நடத்தினால் ரசிகர்களும் ஆர்வத்தோடு வருவார்கள். 'பாக்சிங் டே' போட்டியை பாரம்பரியமாக பின்பற்றுவது போல் நாமும் பொங்கல் டெஸ்ட் போட்டியை மறுபடியும் தொடர வேண்டும்.

கேலரியில் அமர்ந்து கொண்டு கரும்பு தின்று கொண்டே விராத் கோலியின் அற்புதமான 'கவர் ட்ரைவ்' ஷாட்டை பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்குமா?

Quick Links

App download animated image Get the free App now