இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான டெஸ்ட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்து இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விகாரி மற்றும் இஷாந்த் சர்மா 100 ரன்களுக்கு மேல் குவித்தனர்.
கடந்த டெஸ்டில் தனது சதத்தை நழுவ விட்ட விகாரி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். மறுபுறம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷாந்த் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி இந்திய அணி 400 ரன்களை கடக்க உதவி செய்தது.
முதல் டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விடம் சரணடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது டெஸ்டில் அவரது பந்துவீச்சை சமாளிக்குமா என்ற இக்கட்டான நிலையில் களம் இறங்கியது.
ஆட்டம் தொடங்கிய தனது மூன்றாவது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை எடுத்தார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.
தனது இன் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் பந்துவீச்சின் மூலம் முதல் 3 ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியை திணறடித்த பும்ரா தனது நான்காவது ஓவரின் இரண்டாவது பந்தில் டேரன் பிராவோ விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த பந்தில் ராஸ்டன் சேஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஹாட்ரிக் பந்தை முந்தைய பந்தைப் போன்று காலிற்கு நேராக இறக்கினார். ஆனால் பந்து இடதுபுறம் சென்றது என்று அவுட் கொடுக்க மறுத்தார் நடுவர். அந்த முடிவை ரிவியூ செய்தார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அதனை மறுபடியும் பார்த்த மூன்றாவது நடுவர் அவுட் என்று அறிவித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை படைத்த மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ஜஸ்பிரித் பும்ரா. இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார் இர்பான் பத்தான். 13 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பந்து வீச்சாளர் ஹாட்ரிக் சாதனையை படைப்பது இதுவே முதல் முறையாகும்.
தனது ஆறாவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்தது.