சில இன்னிங்ஸ்களை நம்மால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. சில வருடங்கள் கழிந்த பிறகு அந்த மேட்சின் புள்ளிவிவரங்களை மட்டும் பார்ப்பவருக்கோ வீடியோக்களை யூ ட்யூபில் மேய்பவருக்கோ அந்த மேட்ச்சின் அப்போதைய சூழ்நிலையின் மகத்துவம் புரியாது. இதைப் போயா இவ்வளவு சிலாகிக்கிறார்கள் என்று கூடக் கேட்கலாம். ஆனால் அந்த லைவைப் பார்த்த நேயர்களுக்கு அவை இன்று வரை பொக்கிஷ நினைவுகளில் ஒன்று தான். அஜய் ஜடேஜாவின் 96 காலிறுதியில் பாகிஸ்தானுடனான கேமியோவும் அத்தகையதே.
அப்போதைய பாகிஸ்தான் இந்தியா மேட்சுகளில் பொறி! என்றால் பொறி! நிஜமாகவே பறக்கும். அவ்வளவு அனல் மிகு ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் இரு நாட்டு வீரர்களும். 96 உலகக்கோப்பையில் மொஹமது அசாருதின் தலைமையில் களமிறங்கிய இந்தியா கோப்பை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டிருந்தது. போட்டி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசியநாடுகளில் நடந்தது இந்தியாவிற்குச் சாதகமான அம்சமாகவும் இருந்தது. டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருந்ததும் ஒரு காரணம். துவக்க வீரராக இறங்கி பல அணி பௌலர்களையும் ஏறத்தாழ வதம் பண்ணிக் கொண்டிருந்தார் சச்சின். சரி, குறிப்பிட்ட அந்த இன்னிங்சிற்கு வருவோம்.
அஜய் ஜடேஜா 92ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையின்போது லாங் -ஆனில் இருந்து ஓடி வந்து முன்னால் டைவ் அடித்துப் பிடித்த ‘கேட்ச்’ ஒன்றின் மூலம் தான் அனைவரது கவனத்திற்கும் வந்தார். அவரது ‘ஃபீல்டிங்’ அவரைத் தனித்துக் காட்டியது. அசாரைத் தவிர்த்து ராபின் சிங்கும், ஜடேஜாவும் மட்டுமே இந்தியாவின் சிறந்த ஃபீல்டர்களாக அறியப்பட்ட காலம் அது. பின்னர் சில இன்னிங்சுகளில் பார்ட்னர்ஷிப் ஸ்டாண்டு கொடுப்பவராகவும், சிறந்த விக்கெட்டுக்களிடையில் ஓடி ரன்களை அள்ளுபவராகவும் அணியில் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருந்தார். இந்த 96 உலகக்கோப்பை மூலம் தான் ஜடேஜா அதிரடியாக ஆடவும் தனக்கு வரும் என்பதை கிரிக்கெட் உலகிற்கு நிருபித்தார்.
ஸ்கோர் 42 ஓவர்களில் 220/ 5 விக்கெட் என்னும் நிலையில் நயன் மோங்கியாவுடன் ஜோடி சேர்ந்தார் ஜடேஜா. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இறுதி டெத் ஓவர்களில் பந்து வீசுவதென்றால் அல்வா சாப்பிடுவதைப் போலத்தான்! காலுக்குள்ளேயே போட்டு கொத்தி எடுத்து விடுவார்கள். சரி இனி 8 ஓவர்களை எப்படியாவது ஒப்பேற்றி ஒரு முப்பது ரன்களைத் தேற்றி 250 வது கொண்டு வந்து விட்டால் போதும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசையாக இருந்தது. மோங்கியாவும், ஜடேஜாவும் ஒரு ரன்னை இரண்டு ரன்களாக மாற்ற ஓட முயல்கையில் மோங்கியா ரன் அவுட் ஆகி வெளியேறிப் போனார். மறுமுனையில் கும்ளே களமிறங்கியிருக்க ஸ்கோர் 47 ஓவர்களில் 236/6 என்றானது.
மூன்று ஓவர்களில் என்னத்தை அடித்து விடப் போகிறார்கள் எனச் சலிப்புத் தட்டியபோது தான் எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றுபவராக இருந்தார் வக்கார் யூனுஸ். ஒரு நாள் போட்டிகளில் ஓபனிங்கில் சச்சின் அடித்தால் மட்டுமே உண்டு என்கிற இந்தியாவின் நீண்ட கால தேக்க நிலை மாறி மிடில் ஆர்டர் மீண்டும் பலம் பெற்றதாக மாறியதில் ராபின்சிங் மற்றும் அஜய் ஜடேஜாவிற்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையில்லை.
பெங்களுர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்தக் குறிப்பிட்ட. உலகக்கோப்பை காலிறுதியில் (பரம எதிரிகளான) இந்தியாவும், பாகிஸ்தானும் களமிறங்கியது. சித்துவும், சச்சினும் ஓபனிங்கில் ஒரு தரமான 90 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைத் தந்தபிறகு சச்சின் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மஞ்ரேக்கர் பெரிதாக நிலைக்கவில்லை. பின்னர் வந்த அசாருதினும், சித்துவும் சிறிது நன்றாகவே ஆட ஸ்கோர் மெல்ல ஊர்ந்து நகர்ந்தது. அசார் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க காம்ப்ளி 24 ரன்களும் சித்து 93 ரன்களும் எடுத்துப் பெவிலியன் திரும்பியிருந்தனர்.
வக்கார் யூனுஸ் அன்று இருந்த ஃபார்மில் சச்சின் லாரா போன்றவர்களே சற்று பம்மிக்கொண்டே தான் அவருக்கு எதிராகப் பேட் செய்வார்கள். அந்தக் குறிப்பிட்ட ஓவரில் மட்டும் ஜடேஜாவும் கும்ளேவும் இணைந்து எடுத்த ரன்கள் 22. அதிலும் வக்கார் வீசிய கடைசி யார்க்கரை ஜடேஜா அசால்டாக மிட் விக்கெட்டில் சிக்சர் தூக்கியது கண்களுக்குள்ளேயே நிற்கிறது.
யூனுஸ் 48 வது ஓவரை வீச வந்தார். இதற்குப் பிறகு தான் வக்கார் யூனுசை வருபவர் போகிறவர் எல்லாம் வடிவேல் கணக்காக வணக்க ஆரம்பித்தனர் என்பதும் உண்மை...அடுத்த இரு ஓவர்களிலும் ருத்ர தாண்டவத்தைத் தொடர்ந்த ஜடேஜா நான்கு பவுண்டரி இரண்டு சிக்சர்கள் உட்பட 25 பந்துகளில் 45 ரன்களை எடுத்து வெளியேற, 250 ஐ தொடுமா ? என்கிற நிலையில் இருந்த இந்தியா 287/8 என்கிற நிலையில் தனது ஐம்பது ஓவர்களை நிறைவு செய்தது.
இந்தக் குறிப்பிட்ட மேட்சில் பாக் பேட்டிங்கின்போது தான் அமீர் சோகைல் - வெங்கடேஷ் பிரசாத் உடன் வார்த்தைப்போர் மற்றும் சைகைகளில் ஈடுபட்டு பின்னர் அடுத்த பந்திலேயே போல்டு ஆகி வெளியேறிய சிறப்பான "சம்பவமும்" அரங்கேறியது. ஒட்டு மொத்த இந்திய அணியும் சிறப்பாகச் செயல்பட்டு அந்த மேட்சை வென்றெடுத்து அன்றைய தினத்தைத் தனதாக்கிக் கொண்டது.'மேன் ஆஃப் த மேட்ச்' சித்துவுக்கு தான் வழங்கப்பட்டது என்றாலும் இந்த மேட்சை மறக்க இயலாத ஒன்றாக மாற்றி நினைவுகளில் சுமக்க வைத்தது அஜய் ஜடேஜா தான்.