உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் இந்திய அணியை இதுவரை உலக கோப்பை தொடர்களில் வழிநடத்திய கேப்டன்கள் குறித்த தொகுப்பை காணலாம்.
இந்திய அணியை பல்வேறு கேப்டன்கள் வழி நடத்திச் சென்றுள்ளனர். ஆனால், வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்த கபில்தேவ் மற்றும் தோனி மட்டுமே. உலகக் கோப்பை தொடங்கப்பட்ட 1975 மற்றும் 1979ஆண்டுகளில் நடைபெற்ற முதல் இரண்டு உலக கோப்பை தொடர்களில் தகுதி சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. இந்த இந்திய அணியை வழி நடத்திச் சென்ற பெருமை தமிழரான சுழற்பந்துவீச்சாளர் வெங்கட் ராகவனையே சேறும்.
கபில்தேவின் தலைமையில் இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் என்றே கூறலாம். ஆல்ரவுண்டர் கபில்தேவின் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி புது உத்வேகத்துடன் ஆடி வெல்ல முடியாத அணிகளையும், மேற்கிந்திய தீவுகள் அணியையும் வீழ்த்தி முதன் முறையாக உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. அடுத்த 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணியை வழிநடத்திச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 35 வித்தியாசத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது.
1992,1996,1999 என மூன்று உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் அசாருதீன். மோசமான பங்களிப்பு காரணமாக எந்த உலகக் கோப்பையும் கைப்பற்றாமல் வெறுங்கையுடன் திரும்பி இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.
சவுரவ் கங்குலி தலைமையில் இளம் படை
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சவுரவ் கங்குலி தலைமையில் களமிறங்கிய இளம் படை என வர்ணிக்கப்பட்ட அந்த அணி தான் இன்றைய இந்திய கிரிக்கெட்டுக்கு முகமாக விளங்குகிறது. இறுதிப் போட்டி வரை முன்னேறி சென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.
இதற்கிடையே பயிற்சியாளர் கிரேக் சேப்பல் செயல்பாட்டால் குழப்பம் ஏற்பட்டதால் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது எனினும் யாருமே எதிர்பார்க்காத வகையில் சுப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் நாடு திரும்பியது.
தோனி தலைமையிலான இந்திய அணி
மீண்டும் உலக கோப்பை வெல்லும் கனவில் 2011-இல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. அத்துடன் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் கடைசி தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதிப் போட்டி இலங்கைக்கு எதிராக வெற்றி பெற செய்து இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்றுத் தந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார் தோனி.
2015ஆம் ஆண்டு மீண்டும் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது எனினும் அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி வெளியேறியது.
விராத் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லுமா
உலகக் கோப்பை போட்டி வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் நாளான மே 25ஆம் தேதியன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கும், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் மோதுகின்றன. இந்த பயிற்சி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 22ம் தேதி இங்கிலாந்து செல்கிறது.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கேப்டன் விராத் கோலி தலைமையில் இந்திய அணி மூன்றாவது முறையாக உலக கோப்பையை வெல்லுமா என்பதே ரசிகர்களின் மனதில் உள்ள மில்லியன் டாலர் கேள்வி.