உலக கிரிக்கெட் அரங்கில் தேசிய அணியை வழிநடத்துவது என்பது மிகப் பெரிய கவுரவமாகும். அதிலும் 200 ஒருநாள் போட்டிகள் என்பது மிகப் பெரிய சாதனையே. பல வருடங்களாக விளையாடி வரும் ஒருநாள் போட்டிகளில் பல கேப்டன்கள் வழிநடத்தியிருந்தாலும் சில கேப்டன்களே வெற்றிகரமாக வலம் வந்தார்கள். சிறந்த வீரராகச் செயல்படுபவர் அனைவரும் சிறந்த கேப்டன்களாகச் செயல்பட முடிவதில்லை. பெரும்பான்மையான கேப்டன்கள் வெற்றியின் பொழுது ஊக்கப்படுத்தியும், தோல்வியின் பொழுது முன்நின்றும் அணியை வழிநடத்தி வருகின்றனர்.
கேப்டன்கள் பொதுவாக எதிரணிகளை சமாளிக்க பல யுக்திகளை கொண்டு செயல்படுவார்கள். சிறிது காலத்தில் யுக்திகளை எதிரணியினர் புரிந்துகொள்ளும் அபாயம் இருப்பதால் நீண்ட நாட்களாக யுக்திகளை கொண்டு பல போட்டிகளில் வெற்றி பெறுவது கடினமே. யுக்திகள் மட்டுமின்றி விளையாடும் அணியில் உள்ள சரியான 11 பேர் கொண்ட குழுவைத் தேர்ந்தெடுப்பதும் கேப்டனின் பொறுப்பாகும்.
ஒருநாள் போட்டிகளில் முடிவுகளை எடுக்கக் குறுகிய காலமே உள்ள நிலையில் முடிவுகளைச் சரியாக எடுக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் பீல்டிங் போன்றவைகளிலும் சரியான வியூகம் இருக்க வேண்டும். இங்கு, ஒருநாள் அரங்கில் 200 மற்றும் அவற்றிக்கு மேற்பட்ட போட்டிகளில் தனது அணியை வழிநடத்திய 3 கேப்டன்களை பற்றிப் பார்க்கலாம்.
#3 எம்.எஸ்.தோனி (200 போட்டிகள்)
தோனி 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இந்தச் செய்தியைக் கேட்டு ரசிகர்கள் பெறும் அதிர்ச்சி அடைந்தனர். தற்பொழுதும் இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர், தனது கேப்டன் பதவியிலிருந்து விலகிய தருணத்தில் 199 போட்டிகளில் கேப்டனாகப் பங்கேற்றிருந்த இவரால் 200 போட்டியில் வழிநடத்த இயலவில்லை.
இருப்பினும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சிஎஸ்கே அணிக்காகக் கேப்டனாகப் பங்கேற்றார். 199 போட்டிகளில் பங்கேற்ற இவர் தனது 200 ஆவது போட்டியை ஆசியகோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அப்பொழுது கேப்டனாக செயல்பட்ட ரோஹித் மற்றும் தவான் ஒய்வு பெற்றதால் வழிநடத்தினார்.
இந்திய அணியின் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி 200 போட்டிகளில் வழிநடத்தி 110 வெற்றிகளை குவித்துள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 28 ஆண்டுகளுக்கு பின்பு 2011-ஆம் ஆண்டு வென்ற உலகக்கோப்பை மற்றும் 2013-ல் வென்ற சாம்பியன்ஸ் ட்ராபி ஆகும்.
இவர் இந்திய அணியின் கேப்டனாக 6633 ரண்களை குவித்துள்ளார். சராசரி 53.92 ஆகும். இவர் இந்திய அணியின் கேப்டனாக 15 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.
#2 ஸ்டீபன் பிளமிங் (218 போட்டிகள்)
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பிளமிங் நியூசிலாந்து வரலாற்றில் சிறந்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். இவ்வரிசையில் உள்ள மற்ற இரண்டு கேப்டன்களை போல் வெற்றிகளை கண்டதில்லை எனினும், பலமுறை நியூசிலாந்து அணியை வழிநடத்தியுள்ளார்.
இவரது பதவி காலங்களில் இப்பொழுது உள்ள அணியை போல் சக்தி வாய்ந்த அணியாக இல்லை. மிகவும் சரிவிலேயே இருந்தன. இருப்பினும் இவரது பதவி காலம் முடிவடைந்ததும் அணியானது மீண்டும் சரிவுப்பாதைக்கு செல்லாமல் பார்த்து கொண்டார்.
218 போட்டிகளில் 48.04 என வெற்றி சதவீதம் கொண்டுள்ளார். இவரது தலைமையிலேயே பாண்ட், மெக்கல்லம் போன்ற வீரர்களின் எழுச்சியை காண முடிந்தது.
இவர் நியூசிலாந்து அணியை 3 முறை உலகக்கோப்பையில் வழிநடத்தியுள்ளார். இரண்டு முறை அரையிறுதி வரை முன்னேறியது. 1997ல் கேப்டன் பதவியேற்றதும் இளைய வயதில்(23 வயது) கேப்டன் பதவி ஏற்றவர் என்ற பெருமை பெற்றார்.
#1 ரிக்கி பாண்டிங் (230 போட்டிகள்)
1995-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட ஆரம்பித்த இவர் 2002-ஆம் ஆண்டு கேப்டன் பதவியேற்றார்.
ஆஸ்திரேலியா அணி வரலாற்றில் மட்டுமின்றி, உலக அளவிலும் சிறந்த கேப்டன்களில் ஒருவர் ஆவர். இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி உலகில் எந்தவொரு அணியாக இருந்தாலும் வெற்றி பெறும் தன்மை உடையவையாக வலம் வந்தன.
இவரது தலைமையில் வென்ற போட்டிகளின் எண்ணிக்கையானது மற்ற கேப்டன்களை விட மிகவும் அதிகம். 230 போட்டிகளில் 165 போட்டிகளில் வென்றுள்ளார். இவரது வெற்றி சதவீதம் 76.14 ஆகும்.
பொதுவாக கேப்டன்களை உலகக்கோப்பை அல்லது சாம்பியன்ஸ் ட்ராபி வென்றால் சிறந்த கேப்டன் என்பார்கள். பாண்டிங் தொடர்ந்து இரண்டு முறை உலகக்கோப்பை மற்றும் ஒரு சாம்பியன்ஸ் ட்ராபியை ஆஸ்திரேலியா அணிக்காக வென்று கொடுத்துள்ளார்.