மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான ஷிவ்நரேன் சந்தர்பால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அவரின் இரட்டை சதத்தால் அவரது அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சந்தர்பால் பந்துவீசும் வீரர்களிடம் விக்கெட்டை வீழ்த்த விடாமல் வாட்டி வதைப்பதில் வல்லவர். அவர் விக்கெட்டை எடுப்பது அவ்வளவு எளிதில்லை, அதனால் தான் அவர் ஜாம்பவான் என்று அழைக்கப்படுகிறார்.
மேற்கிந்திய தீவுகள் வீரரான இவர் 2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போதிலிருந்து உள்ளூர் போட்டிகளிலும் கிளப் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். அவர் கரிபியன் நடந்த ஒரு உள்ளூர் டி20 போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆடம் சான்ஃபோர்டு கிரிக்கெட்4 லைப் என்னும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் தற்போது கரீபியன் நாடுகளில் நடந்து வருகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான சந்தர்பால் டுவைன் ஸ்மித் ஆகியோர் இந்தத் தொடரில் பங்கேற்று உள்ளனர்.
சந்தர்பால் ஒரு முக்கியமான போட்டியில் டுவைன் ஸ்மித் உடன் தொடக்க ஆட்டக்காரராக USA நாட்டைச் சேர்ந்த உள்ளூர் அணிக்கு எதிராக களமிறங்கினார் . அனுபவமுள்ள வீரரான அவர் எதிரணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து இரட்டை சதம் விளாசி மிரள வைத்தார்.
அவர் முதல் இன்னிங்சில் முடிவில் 210 ரன்கள் குவித்து ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தினார். அவர் அடித்த 210 ரன்களில் 25 பவுண்டரிகளும் 13 சிக்சர்களும் அடங்கும். மறுபுறம் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த டுவைன் ஸ்மித் 29 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் சந்தர்பாலின் அணி 303 ரன்கள் குவித்தது. ஆட்டத்தின் முடிவில் சந்தர்பால் அணி 192 ரன்கள் வித்தியாசத்தில் எதிர் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டி கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்க படவில்லை என்பதால் இந்த சாதனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதனால் கிறிஸ் கெயிலின் சாதனையான 175 ரன்களுக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை. அவர் இந்த சாதனையை 2015 ஐபிஎல்லின் போது புனே அணிக்கு எதிராக நிகழ்த்தினார். இருந்தபோதிலும் அங்கீகரிக்கப்பட்ட டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. டி20 போட்டிகள் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. வில்லோ மரத்தில் செய்யப்படும் கிரிக்கெட் மட்டைகள் பேட்ஸ்மேன்களின் வேலையை மேலும் சுலபமாக்குகிறது. இந்த காலகட்டம் பவுலர்களுக்கு சோதனை காலமாக உள்ளது. சச்சின் 50 ஓவர் போட்டியில் இரட்டை சதத்தை தொட்டதுபோல் 20 ஓவர் போட்டியில் யார் அந்த சாதனையை பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சந்தர்ப்பாலை இனிமேல் சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியாவிட்டாலும் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் லான்ச்ஷையர் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய மகனும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து ஒரு அணிக்காக விளையாடி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.