டி20 தொடர்களில் மிக விறுவிறுப்பான தொடர் என்றால் அது ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு முதல், வருடத்திற்கு ஒருமுறை என்ற வீதம் தொடர்ந்து 11 வருடமாக இந்தியாவில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் இறுதிவரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலைசிறந்த அணிகளாக இந்த ஐபிஎல் தொடரில் திகழ்ந்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற போட்டியை போன்று, ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதுகின்ற போட்டிகளுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவ்வாறு தலைசிறந்து விளங்கும் இந்த இரு அணிகளிலும் உள்ள சிறந்த ஆல்ரவுண்டர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள சிறந்த ஆல்ரவுண்டர்கள்
ஷேன் வாட்சன்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ஷேன் வாட்சன். அனைத்து போட்டிகளிலுமே சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி, அதில் 555 ரன்களை விளாசினார். அதுமட்டுமின்றி பகுதிநேர பந்துவீச்சாளராகவும் செயல்பட்டார். இவர் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 154.59 ஆகும் அது மட்டுமின்றி இவர் இரண்டு சதங்களையும் விளாசினார்.
கேதார் ஜாதவ்
தற்போது இந்திய அணியில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளையாடி வருகிறார் கேதார் ஜாதவ். மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அது மட்டுமின்றி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு, தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து கொடுக்கிறார். இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது. உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்த அளவிற்கு தனது சிறப்பான விளையாட்டின் மூலம் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். மற்ற அனைத்து போட்டிகளிலுமே இவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#2) மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சிறந்த ஆல்ரவுண்டர்கள்
ஹர்திக் பாண்டியா
தற்போது உள்ள இந்திய அணியில் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான். கடைசி நேரத்தில் வந்து தனது அதிரடியின் மூலம் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தக் கூடிய திறமை படைத்தவர். இந்திய அணியில் நிரந்தர ஆல்ரவுண்டர் இவர் மட்டும்தான். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பெறுவார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் 13 போட்டிகளில் விளையாடி, அதில் 260 ரன்களையும், 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
குருணால் பாண்டியா
இவரும் சிறப்பான ஆல்ரவுண்டர்களில் ஒருவர்தான். தற்போது இந்திய அணியில் டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்று வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதன் காரணமாகத்தான் இவர் தற்போது இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 228 ரன்களையும், 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 153.91 ஆகும்.