“நாங்கள் டீம் மீட்டிங்கே வைப்பதில்லை” – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெத்து!

Chennai Super Kings
Chennai Super Kings

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டீம் மீட்டிங் என்ற பேச்சுக்கே இடமில்லை. போட்டி நடைபெறுவதற்கு முன்னர் எந்த திட்டமிடலும் செய்ய மாட்டோம்”. இப்படி கூறியது யார் தெரியுமா? நம் சென்னை சூபர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ. என்ன, அவர் சொல்வதை நம்ப முடியவில்லையா?

நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஓவரில் மோசமாக பந்துவீசிய பிராவோ, அதன்பிற்கு எவ்வாறு சுதாரித்து விக்கெட்டுகளை சாய்த்தார் என்ற சின்ன உதாரணத்தை பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும். ஆட்டத்தின் 14-வது ஓவரை வீச வந்தார் பிராவோ. அப்படியென்றால், 16, 18 மற்றும் 20-வது ஓவரையும் பிராவோ தான் வீசியாக வேண்டும். இந்த ஓவர்களில் சிறிய தவறு நிகழ்ந்தால் கூட எதிரணிக்கு சாதகமாக அமைந்துவிடும். ஆனால், தனது முதல் ஓவரிலேயே தவறு செய்தார் பிராவோ. மெதுவாக வீசப்பட்ட முதல் பந்து பவுண்டரி சென்றது. அடுத்த பந்து லெக் சைடில் வைட் சென்றது. புல் டாஸாக வீசப்பட்ட நான்காவது பந்தும் பவுண்டரி சென்றது. இப்படி அந்த ஓவரில் 17 ரன்களை வாரி வழங்கினார் பிராவோ.

ஆனால் தொடர்ந்து பிராவோவை பந்துவீச வைத்தார் தோனி. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஷிகர் தவான், ரிஷப் பண்ட் மற்றும் காலின் இங்க்ரம் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை சாய்த்தார். “முதல் ஓவரில் 17 ரன் விட்டுக் கொடுத்தேன். அந்த ஓவரில் நான் நினைத்த மாதிரி பந்து வீச முடியவில்லை. பிறகு பிட்சின் நிலைமையை புரிந்து கொண்டு ஸ்டம்பை நோக்கி வேகமாக பந்துவீசினாலே போதும் என முடிவு செய்தேன். மெதுவாக வீசாமல் தொடர்ந்து நேராக பந்து வீசுவதையே தோனியும் விரும்பினார். நல்ல வேகத்தில், நேராக, ஸ்டம்பை நோக்கி எனது இரண்டாவது ஓவரை வீசினேன். விக்கெட்டுகளும் தொடர்ந்து கிடைத்தன” என்கிறார் பிராவோ. சரி இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? ஓவரின் இடைவேளையில் பிராவோ-விடம் தோனி பேசியதே காரணம்.

மேலும் பிராவோ கூறுகையில், “நேற்றைய போட்டியில் நீங்கள் கவனித்தீர்கள் என்றால் தெரியும். நான் வழக்கமாக போடும் யார்க்கர், ஸ்லோ பால் போன்றவைகளை அதிகமாக பயன்படுத்தவில்லை. ஏனென்றால் பிட்ச்சின் தன்மை அப்படியிருந்தது. அந்த சமயத்தில் என்ன தேவை என்பது தோனிக்கும் நன்றாக தெரியும். அணிக்கு தேவையான எந்த சமயத்திலும் என்னால் பங்களிக்க முடியும் என்பதை தோனி அறிவார்”.

Dhoni and Bravo
Dhoni and Bravo

தோனியோடு பேட்டிங் செய்வதற்கு வித்தியாசமான திட்டமிடல் வேண்டும். ஏனென்றால், மற்ற பேட்ஸ்மேன்கள் போல் அல்லாமல் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு செல்வார் தோனி. இதைப்பற்றி கேட்டால் உடனடியாக, “நாங்கள் எந்த திட்டமிடலும் செய்வதில்லை. ஒருபோதும் டீம் மீட்டிங் நடத்துவதில்லை. எல்லா போட்டிகளிலும் இப்படித்தான் செய்வோம். போட்டி சூழ்நிலைகளை கவனித்து அதற்கேற்றார்ப் போல் எங்களை உடனடியாக மாற்றி கொள்வோம். அங்குதான் எங்கள் அணுபவம் கை கொடுக்கிறது” என்கிறார் பிராவோ.

ஆனால் இந்த அணுபவத்தை சென்ற ஆண்டு பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் இப்போது கோப்பையை வென்ற பிறகு எல்லாரும் வீரர்களின் அணுபவத்தை பாராட்டி கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, நேற்றைய போட்டியில், ஸ்லோ பிட்ச் என்பதால் தாங்கள் பேட்டிங் பிடிக்கும் போது முதல் சில ஓவர்களிலேயே ஆட்டத்தை தங்கள் கட்டுப்பட்டில் கொண்டு வந்துவிடலாம் என சென்னை அணியினர் அறிந்திருந்தனர். அது தான் நடக்கவும் செய்தது. ஆட்டத்தின் போக்கையே பவர்பிளே-க்குள் மாற்றி விட்டார் வாட்ஸன்.

Bravo
Bravo

“வயது என்பது சாதாரண எண் தான் என கடந்த சீசனே நாங்கள் நிரூபித்துள்ளோம். சென்னை அணியை பற்றி எப்போது யார் பேசினாலும் எங்கள் வயது குறித்தே பேசுவார்கள். எங்களுக்கு ஒன்றும் 60 வயது ஆகவில்லை. 32, 34, 36 வயது தான் ஆகிறது. நாங்கள் இன்றும் இளமையாக தான் இருகிறோம். எங்களுக்கு நிறைய அணுபவம் இருக்கிறது. நீங்கள் என்ன சொன்னாலும் சரி, எந்தவொரு போட்டியிலும் நீங்கள் அணுபவத்தை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது”.

“களத்தில் எங்களால் வேகமாக ஓட முடியாது என்பது எங்களுக்கு தெரியும். எங்கள் பலத்தை கொண்டே நாங்கள் விளையாடுகிறோம். எங்கள் பலவீனம் என்ன என்று நன்றாக தெரியும். நாங்கள் ஸ்மார்ட்டாக விளையாடுகிறோம். அதுதான் இங்கு முக்கியம். அதுவும் எங்கள் அணியை வழிநடத்துவது உலகின் சிறந்த கேப்டன். நாம் வேகமான அணி அல்ல, ஆனால் ஸ்மார்ட்டான அணி என்பதை தோனியும் எங்களுக்கு அவ்வப்போது நினைவுப்படுத்தி கொண்டேயிருப்பார்” என்கிறார் பிராவோ.

சாம்பியண் அணி என்றால் சும்மாவா!

Quick Links

Edited by Fambeat Tamil