ஐபிஎல் தொடரின் தலை சிறந்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளங்குகிறது. பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர்கள் அதிகமாக இடம் பெறுவதில்லை. அனுபவ வீரர்கள் மட்டும் தான் அதிக போட்டிகள் விளையாடுவார்கள்.
அந்த அனுபவ வீரர்கள் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த அணியாக, விளங்குவதற்கு காரணமாக இருக்கின்றனர். இவ்வாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடைசி மூன்று சீசன்களில் சிறப்பாக விளையாடிய, பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களின் பற்றி இங்கு காண்போம்.
#1) 2018 ஆண்டு ஆண்டு ஐபிஎல் தொடர்:
அம்பத்தி ராயுடு – 602 ரன்கள்
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அம்பத்தி ராயுடு வெளியேற்றப்பட்டார். அதன்பின்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்துக்கொண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவருக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி, அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர தொடக்க ஆட்டக்காரராகவே மாறினார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 602 ரன்கள் விளாசினார். இதில் ஒரு சதமும் அடங்கும். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 149.75 ஆகும்.
ஷர்துல் தாக்கூர் – 16 விக்கெட்டுகள்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தாகூர், சிறந்த இளம் பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தார். அனைத்து போட்டிகளிலுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்தார். இவர் மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி அதில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் இவர்தான்.
#2) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த கிரிக்கெட் வாரியம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தொடர்ந்து இரண்டு வருடம் விளையாட தடை விதித்தது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.
#3) 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்:
பிரண்டன் மெக்கலம் – 436 ரன்கள்
2015 ஆம் ஆண்டு தான் பிரண்டன் மெக்கலத்தை ஐபிஎல் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அனைத்து போட்டிகளிலுமே அதிரடியை காட்டினார். அனைத்து போட்டிகளிலும் சராசரியான தொடக்கத்தை கொடுத்து வந்தார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி, அதில் 436 ரன்களை விளாசினார். இதில் ஒரு சதமும் அடங்கும். 2015ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 155.71 ஆகும். அந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக அதிக ரன்களை விளாசிய பேட்ஸ்மேன் இவர்தான்.
டுவைன் பிராவோ – 26 விக்கெட்டுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் சிறந்த டெத் பவுலராக திகழ்ந்து வருகிறார் டுவைன் பிராவோ. பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி, பந்துவீச்சிலும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இவர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 17 போட்டிகளில் விளையாடி அதில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#4) 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்:
டுவைன் ஸ்மித் – 566 ரன்கள்
2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்தார் ஸ்மித். பவர் பிளே ஓவர்களில் தனது அதிரடியின் மூலம், அனைத்து போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்து வந்தார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் மொத்தம் ஐந்து அரைச்சதங்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி அதில் 566 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி 34 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.
மோஹித் சர்மா - 23 விக்கெட்டுகள்
2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மிகச் சிறப்பாக பந்து வீசி வந்தார் மோஹித் சர்மா. டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் எதிரணியை கட்டுப்படுத்தும் திறமை படைத்தவர். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, அதில் மொத்தம் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் இவர்தான்.