ஐபிஎல் தொடரில் மிக பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் தலை சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. 2010, 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு உதவிய முக்கிய வீரர்களை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#1) 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு உதவிய வீரர்கள்!!
சுரேஷ் ரெய்னா மற்றும் முத்தையா முரளிதரன்
சுரேஷ் ரெய்னா 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர நாயகனாக திகழ்ந்தார். அனைத்து போட்டிகளிலுமே தனது அதிரடியை காண்பித்து வந்தார். இன்று வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு முக்கிய வீரர் என்றால் அது சுரேஷ் ரெய்னா தான். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலை சிறந்த அணியாக விளங்குவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம் தான்.
தனி ஒருவராக போராடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல வெற்றிகளில் உதவி இருக்கிறார். சுரேஷ் ரெய்னா 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி மொத்தம் 502 ரன்களை குவித்தார். அந்த ஆண்டு இவரது ஸ்ட்ரைக் ரேட் 142.85 ஆகும். 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமான மற்றொரு வீரர் முத்தையா முரளிதரன். அந்த ஆண்டு ரன்களை கட்டுப்படுத்துவதிலும், அதிக விக்கெட்டுகளை எடுப்பதிலும் வல்லவராக திகழ்ந்தார். அவர் 12 போட்டிகளில் விளையாடி மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
#2) 2011 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு உதவிய வீரர்கள்!!
மைக்கேல் ஹசி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்
2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார் மைக்கேல் ஹசி. அனைத்து போட்டிகளிலுமே சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தார். அதுமட்டுமின்றி பந்துவீச்சில் அஸ்வின் மிகச் சிறப்பாக விளையாடினார். இக்கட்டான சூழ்நிலையில் எதிரணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி, சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மைக்கேல் ஹசி அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, அதில் மொத்தம் 492 ரன்களை விளாசினார். பந்துவீச்சில் அஸ்வின் 16 போட்டிகளில் விளையாடி, 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
#3) 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு உதவிய வீரர்கள்!!
அம்பத்தி ராயுடு மற்றும் ஷர்துல் தாக்கூர்
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அம்பத்தி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார். அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்சனும் அனைத்து போட்டிகளிலுமே சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அம்பத்தி ராயுடு 16 போட்டிகளில் விளையாடி 602 ரன்களை குவித்தார். ஷர்துல் தாக்கூர் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்தார். இவர் 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.