ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று தனது 17ஆவது சதத்தை பூர்த்தி செய்தார் செதேஸ்வர் புஜாரா. விராட் கோலியுடன் நிதானமான பார்ட்னெர்ஷிப்பை வழி நடத்திய புஜாரா நிறைய பந்துகளை உட்கொண்டு சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். நிதானமாக ஆடிய புஜாரா மற்றும் கோலி இணை 170 ரன் பார்ட்னர்ஷிப்பை அரங்கேற்றினர்.
ஸ்டார்க் வீசிய பந்தில், 82 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார் கோலி. வலுவானபார்ட்னர்ஷிப் முறிந்தபின் 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புஜாராவும் அவுட்டானார். தனது சதத்தை 280 பந்துகளை எதிர்கொண்டு புஜாரா அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மையக்கருத்து …
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 443 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது, ரோஹித் ஷர்மா 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின்பு ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர்கள் மார்கஸ் ஹாரிஸ் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கி அட்டமிழக்காமல் 7 ஓவர்களை எதிர்கொண்டு இன்றைய நாளை நிறைவுச்செய்தனர். போட்டியின் இரண்டாம் நாள் முடிவடைந்த பின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற புஜாரா பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பாக, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக ஒரு போட்டியில் இருந்து கழட்டிவிடப்பட்டிருந்தார் புஜாரா. எனவே விமர்சகர்களின் கருத்துக்களுக்கு வருந்துவதில்லை என்று கூறிய புஜாரா “நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஆடுவது மற்றவர்களை அமைதி படுத்த வேண்டும் என்பதற்காக இல்லை. நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை சேர்க்கவே முயல்கிறேன், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த என்னால் முடியாது” என்று தெரிவித்திருந்தார்
மெல்போர்ன் ஆடுகளத்தை பற்றி கருத்துக் கூறிய புஜாரா “ரன்களை எடுக்க இந்த பிட்ச் உகந்ததாக இல்லை, நேற்றைய களத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் இன்றைய களம் பல வேறுபாடுகளை கொண்டிருந்தது. சில நேரங்களில் பந்து அதிக பௌன்ஸை உறிஞ்சி அபரிவிதமாக துள்ளல் கொண்டிருந்தது. எனவே எதிர்வரும் நாட்களில் இங்கே பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது, மேலும் எங்களது பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசி வருகின்றனர், எனவே எங்களது முதல் இன்னிங்ஸ் ஸ்கோரானது போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் நன்றாக ஆட வேண்டும் என்று கூறிய புஜாரா “என்னுடைய முழு முதல் வேலை ரன்களை எடுப்பது, அது சொந்த களமாக இருந்தாலும் சரி அல்லது அந்நிய களமாக இருந்தாலும் சரி.. சில சமயத்தில் நன்றாக ஆடாத பட்சத்தில் பலதரப்பட்ட கருத்துகள் உலவுவது வழக்கம்தான், அதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும், அதேசமயம் போட்டியில் இந்தியா வெற்றி கண்டால் இறுதியில் மகிழ்ச்சியே கிட்டும்”
அடுத்தது என்ன ?
வலுவான நிலையில் உள்ள இந்திய அணி நாளை நடக்கும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் விரைவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை சாய்க்க யுத்திகளைக் கையாளும். இரண்டாவது இன்னிங்சிலும் இந்தியா நிதானமாக ஆடி அதிகப்படியான முன்னிலை பெற்று, ஆஸ்திரேலிய அணியினரை இரண்டாவது இன்னிங்சில் ஆல் அவுட்டாகி வெற்றியை சுவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய ஆட்டம் இந்த போட்டியை தீர்மானிக்கும் ஆட்டமாக இருக்கும்.