2019 உலககோப்பை விளையாடும் இந்திய அணி அறிவிப்பு எப்போது..? தேர்வுக்குழு தலைவர் பேட்டி :

MSK Prasad
MSK Prasad

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் மே மாதம் 29இல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்குகின்றன. இந்நிலையில் உலககோப்பையில் விளையாடும் இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக இந்திய அணிக்கு நான்காம் வரிசையில் விளையாடும் வீரரை தேர்வு செய்வது அணியின் நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. அதனால் எல்லாருடைய பார்வையும் தேர்வுக்குழுவினரின் மேல் விழுந்துள்ளது.

அம்பத்தி ராயுடு, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் அந்த இடத்தை நிரப்ப போட்டி போடுகின்றனர். குறிப்பாக விஜய் சங்கரும், ராயுடுவும் நன்றாக விளையாடி உள்ளனர். இதனால் தேர்வுக்குழுவினருக்கு யாரை எடுப்பது யாரை எடுக்கக் கூடாது என்று சிரமமான பணியாக இருக்கும். இந்திய அணி உலககோப்பையில் தனது முதல் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஜூன் 5ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் MSK பிரசாத் உலககோப்பையில் விளையாடும் இந்திய அணி ஏப்ரல் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். அவர் காளஹஸ்தி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் உலககோப்பை அணி தேர்வுக்காக கடந்த ஒன்றரை வருடங்களாக கடுமையாக உழைத்து வருகிறோம் என்றும், நாங்கள் எல்லா வீரர்களையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளோம் என்றும், நல்ல கூட்டணிகளை சோதித்து பார்த்துள்ளோம் என்று கூறினார். நாங்கள் அறிவிக்கும் அணி கண்டிப்பாக உலககோப்பையை வெல்லும் என உறுதிபட தெரிவித்துள்ளார். உலககோப்பை அணி குறித்த கேள்விக்கு முன்பே பதிலளித்திருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, உலககோப்பை போட்டியில் விளையாடப் போகும் இந்திய அணி கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றும், அணியின் பேலன்ஸ் தான் கவலைக்குரிய விஷயமாக உருவெடுத்து உள்ளதாகவும், அதுவும் ஹர்திக் பாண்டியா வந்த பிறகு சரியாகிவிடும் என்றும் கூறியிருந்தார். இந்திய அணியைப் பொறுத்த வரை விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா, ஷிகார் தவான், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர் ஆகியோரது இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட், கே எல் ராகுல் ஆகியோர் அணி தேர்வில் முன்னணியில் உள்ளனர். மீதி இருக்கும் இடங்களில், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு உலககோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்று அனைத்து வீரர்களும் முயற்சி செய்து வருகின்றனர். எனவே ஐபிஎல் போட்டிகளில் தங்களது திறனை சிறப்பாக வெளிப்படுத்துபவர்களை தேர்வு குழு நிர்வாகம் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெற்று கலக்கி வரும் விஜய் சங்கர் ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவரது இடமும் ஏறத்தாழ உறுதியாகிவிடும் என்று தெரிகிறது. ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின், தேர்வு குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.

Quick Links

App download animated image Get the free App now