தங்களது நாட்டின் கிரிக்கெட் அணியில் இணைந்து சர்வதேச அளவில் ஜொலிப்பதே ஒவ்வொரு இளம் வீரரின் கனவாகும். அத்தகைய வாய்ப்புகள் அமைந்துவிட்டால் அந்த இளம் வீரர்கள் நாட்டிற்காக தங்களை அர்ப்பணிக்க துவங்கிவிடுவார்கள். அதுபோல, சர்வதேச அளவில் விக்கெட்களை தொடர்ந்து கைப்பற்றுவதே ஒவ்வொரு பந்துவீச்சாளர்களின் முக்கிய நோக்கமாகும். அதுவும் ஸ்டம்ப்களை குறிவைத்து விக்கெட்களை வீழ்த்துவது தனிப்பட்ட அளவில் சிறப்பம்சமாகும். இது பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையினை அளித்து ஊக்கப்படுத்தும். இவ்வாறு பல பந்துவீச்சாளர்கள் கிளீன் போல்ட் மூலம் விக்கெட்களை வீழ்த்த முயன்ற நிலையில், சிலர் மட்டுமே வரலாற்றில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்கள். எனவே, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை கிளீன் போல்ட் மூலம் விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.முத்தையா முரளிதரன் - இலங்கை ( 171 விக்கெட்கள் ):
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ள முத்தையா முரளிதரன், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். பலவிதமான சாதனைகளை அரங்கேற்றியுள்ள இந்த சுழல் பந்துவீச்சாளர், களத்தில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். இவரது அபார பந்துவீச்சு தாக்குதலால் இலங்கை அணி பலமுறை தொடர்களை வென்றுள்ளது. மேலும் அனைத்து கால கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் முன்னிலை வகிக்கிறார், முத்தையா முரளிதரன். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேங்களின் விக்கெட்களை கூட பலமுறை தமது மாயாஜால சுழற்பந்து வித்தையால் கபளீகரம் செய்து உள்ளார். இந்தப் பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கும் இருக்கும் இவர், 126 முறை எதிரணி பேட்ஸ்மேன்களை கிளீன் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
#2.வாக்கர் யூனிஸ் - பாகிஸ்தான் ( 151 விக்கெட்கள் ):
பாகிஸ்தான் அணியில் உருவான சில தரமான பந்துவீச்சாளர்களில் ஒருவர், வாக்கர் யூனிஸ். வேகப்பந்து வீச்சாளரான இவர், பந்தினை ஸ்விங் செய்வதில் வல்லவர். எனவே, இவரது காலத்தில் பல பேட்ஸ்மேன்களும் இவருக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்டத்தினை அளிக்க சற்று தடுமாறினர். 1990களில் பாகிஸ்தான் அணியின் தொடர் வெற்றிகளுக்கு காரணமாய் அமைந்தார், வாக்கர் யூனிஸ். அக்காலகட்டத்தில் இவரின் சாதனைப் பட்டியல் தொடர்ந்து நீண்ட வண்ணமே இருந்தன. ஒருநாள் போட்டிகளில் 416 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், 151 விக்கெட்களை கிளீன் போல்ட் முறையில் கைப்பற்றியுள்ளார். விரைவிலேயே எதிரணி பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பும் ஆற்றல் வாய்ந்த வாக்கர் யூனிஸ் அற்புதமான யார்கர்களையும் அவ்வப்போது வீசுவது அக்காலகட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருந்தது.
#1.வாசிம் அக்ரம் ( 176 விக்கெட்கள் ):
வாசிம் அக்ரமை விட சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இவ்வுலகில் உண்டோ ? இவருக்கு நிகராக ஏதேனும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஒருநாள் போட்டிகளில் விக்கெட்களை கைப்பற்றி உள்ளாரா ? இவரை விட அதிக முறை கிளீன் போல்டு முறையில் விக்கெட்களை வீழ்த்திய வீரர் இருக்கிறாரா ?இந்த கேள்விகளுக்கு அனைத்துக்கும் இல்லை என்பதே பொருத்தமான விடையாகும். தனது அபாரமான துள்ளி பந்துவீச்சு தாக்குதல்களால் கிரிக்கெட் வரலாற்றில் பலமுறை சரித்திரத்தை மாற்றி அமைத்துள்ளார், வாசிம் அக்ரம். இவரின் பங்களிப்பால் பாகிஸ்தான் அணி பல்வேறு உச்சங்களை அடைந்தது. மேலும், இன்றளவிலும் உள்ள இளம் தலைமுறை பந்துவீச்சாளர்களுக்கு இவர் ஒரு உந்துகோலாக அமைந்து வருகிறார். 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அவற்றில் குறிப்பிடும் வகையில், 176 முறை கிளீன் போல்டு முறையில் எதிரணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வரலாற்றில் அதிக முறை கிளீன் போல்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் கொண்டுள்ளார், வாசிம் அக்ரம். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாசிம் அக்ரம், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் சாஹின் அஃப்ரிடிக்கு போட்டி துவங்கும் முன்னர் தனது ஆலோசனைகளை வழங்கி வெற்றி கண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.