இங்கிலாந்தில் தற்போது உள்ளூர் T20 போட்டி தொடர் (வைட்டாலட்டி பிளாஸ்ட்) நடைபெற்று வருகிறது. மொத்தம் 18 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த மிகப்பெரிய T20 போட்டி தொடர் இங்கிலாந்தில் மட்டுமல்லாது உலகெங்கிலும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் தான் இந்த புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 'லீசெஸ்டர்ஷைர்' மற்றும் 'வார்விக்ஷைர்' அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லீசெஸ்டர்ஷைர் அணி, ஹாரி சுவின்டேல்ஸ் மற்றும் லீவிஸ் ஹில் ஆகியோரின் அபார அரைசதங்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.
பின்னர் 190 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வார்விக்ஷைர் அணிக்கு சாம் ஹெயின் மற்றும் ஆடம் ஹோஸ் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இந்த அணி 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து மிக நல்ல நிலையில் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.
https://twitter.com/VitalityBlast/status/1159202492896481283?s=19
ஆனால் இதற்குப் பிறகுதான் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அது புதிய உலக சாதனைக்கான தொடக்கமாகவும் அமைந்தது. லீசெஸ்டர்ஷைர் அணியின் கேப்டனான 'காலின் ஆக்கர்மான்' தனது பகுதிநேர சுழற்பந்து வீச்சில் எதிரணியின் விக்கட்டுகளை கொத்துக்கொத்தாக அள்ள தொடங்கினார்.
114-2 என நல்ல நிலையில் இருந்த வார்விக்ஷைர் அணி இவரது பந்துவீச்சில் முற்றிலும் நிலைகுலைந்து அடுத்த 20 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் மிக அற்புதமாக பந்து வீசிய லீசெஸ்டர்ஷைர் அணி கேப்டன் 'காலின் ஆக்கர்மான்' 4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளி (4-0-18-7) புதிய T20 உலக சாதனையை படைத்தார். மேலும் T20 கிரிக்கெட்டில் ஒரு பந்து வீச்சாளர் 7 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு மலேசிய நாட்டை சேர்ந்த பந்துவீச்சாளர் 'அருள் சுப்பையா' இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற போட்டியில் 'சோமர்செட்' அணிக்காக களம் கண்டு 'கிளாமோர்கன்' அணிக்கு எதிராக 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த 8 ஆண்டு கால சாதனையை ஆக்கர்மான் முறியடித்துள்ளார்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த இவர் சிறந்த பேட்ஸ்மன் ஆவார். மேலும் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான இவர் இதற்கு முன்பு ஆடிய 90 T20 போட்டிகளில் வெறும் 31 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார். இவரது முந்தைய சிறந்த பந்துவீச்சு (3-21) ஆகும்.
புதிய உலக சாதனை படைத்த ஆக்கர்மான் இது குறித்து கூறுகையில்,
"என்னால் இதை இப்பொழுதும் நம்ப முடியவில்லை. நான் என்னை ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டர் ஆகவே கருதியிருந்தேன். நான் இந்த 'கிரேஸ் ரோட்' மைதானத்தில் இதுபோன்ற சுழற்சியை முதன்முதலாக தான் பார்க்கிறேன். எனவே நான் என்னுடைய உயரத்தை பயன்படுத்தி நன்றாக பவுன்ஸ் செய்தேன். மேலும் பந்தின் வேகத்தை மாற்றி மாற்றி வீசியதர்க்கும் நல்ல பலன் கிடைத்தது".
புதிய உலக சாதனை படைத்த 'காலின் ஆக்கர்மான்'-க்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.