ஒரு அணி வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, அந்த அணியின் எந்தப் பெரிய தவறுகளும் கண்ணுக்குப் புலப்படாது. மாறாக ஒரு அணி தொடர்ச்சியாகத் தோல்வி அடையும்பொழுது சிறு தவறு கூடப் பெரிதுபடுத்தப்படும். இந்த வகையான நிகழ்வு கிரிக்கெட் அணிக்கும் உண்டு. அப்படியொரு சூழ்நிலையில் தான் தற்போது இந்திய அணியுள்ளது எனலாம். அதிலும் முக்கியமாக அனைவரது பார்வையும் இருப்பது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மேல்தான் என்பதே உண்மை. அவர் பொறுப்பேற்றதிலிருந்தே பல சர்ச்சைகளைக் கண்டுள்ளார் அதைப் பற்றி இதில் காணலாம்.
பயிற்சியாளர் தேர்வு:
இவர் கண்ட முதல் சர்ச்சை, அது பயிற்சியாளர் பொறுப்புதான். பிசிசிஐ மூன்று பேர் அடங்கிய குழு ஒன்றை பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்காக அமைத்தது. அதில் சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடக்கம். இவர்கள் மூவரும் பல நிகழ்வுகளை ஆராய்ந்து அணில் கும்ப்ளே அவர்களைப் பயிற்சியாளராக நியமித்தனர். ஆனால் அவரின் அடக்குமுறை பயிற்சியை விராட் கோஹ்லியால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இதனால் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
அந்தச் சூழலில் தான் ரவி சாஸ்திரியைப் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று விராட் கோஹ்லி பரிந்துரைத்தார். அவரின் சொற்படியே ரவி சாஸ்திரி பொறுப்பேற்றார். அதுமட்டுமில்லாமல் அவர் தனக்கு இணக்கமான பௌலிங் பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆகியோரை இணைத்துக் கொண்டார்.
இப்படியொரு அணியின் கேப்டன் பரிந்துரைபடி பயிற்சியாளரை மாற்றுவது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று இன்றும் சிலர் கண்டனம் தெரிவிப்பதை காணமுடிகிறது. எனவே, இந்தச் சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.
வெளிநாட்டு தொடர்கள்:
இந்தியா அணி பலம் வாய்ந்த அணி என்பதில் எந்த சந்தேகமும் எவருக்கும் இல்லை. சொந்த மண்ணில் நடந்த அனைத்து தொடரிலும் வெற்றி வாகை சூடியது. பின்பு, வெளிநாட்டு சுற்றுப்பயணமாக முதலில் தென் ஆப்பிரிக்கா சென்றது. அங்கு டெஸ்ட் தொடரை வெல்லாவிட்டாலும் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று ஆறுதல் அளித்தது.
அடுத்தபடியாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை வென்று நம்பிக்கையுடன் ஒருநாள் தொடரில் களமிறங்கியது. இதுவரை கோஹ்லி தலைமையில் ஒருநாள் தொடரை இழந்ததில்லை. ஆனால் இம்முறை ஒருநாள் தொடரை இழந்து விமர்சனத்திற்கு உள்ளானது இந்திய அணி.
இதற்கு காரணம் பந்துவீச்சாளர்கள் தேர்வு தவறாகப் போனது தான் காரணம் எனக் கூறப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் புவனேஷ்வர் குமார் இல்லாமல் களமிறங்கியது இந்தியா அணி, அது ஏன் என்ற கேள்விக்குக் காயம் என அணி நிர்வாகம் பதில் கூறியது. பிறகு தொடரை நிரணயிக்கும் மூன்றாவது போட்டியில் புவனேஷ்வர் குமார் களமிறக்கப்பட்டார். அவரின் மோசமான பந்துவீச்சு காரணமாக இந்தியா அணி தோல்வியைத் தழுவியது. அதில் புவனேஷ்வர் குமார் முழுஉடல் தகுதி எட்டாமலே களமிறங்கியது தான் காரணம் என அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.
சர்ச்சை கருத்து:
பின்பு டெஸ்ட் தொடர் ஆரம்பமானது. இந்தமுறை எப்படியாவது தொடரை வென்றுவிடும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதில் இந்தியா பேட்ஸ்மேன்களின் பேட்டிங் மோசமாக இருந்தது.
இதுபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, " இந்திய அணிகளிலேயே தற்போதுள்ள இந்திய அணி தான் மிகவும் சிறந்தது, மேலும் வெளிநாட்டு தொடர்களில் இந்த அணிபோல் வேறெந்த இந்திய அணியும் ஜொலிக்கவில்லை " எனக் கூறினார்.
இந்தக் கருத்தைத் தெரிவித்த அடுத்த சில கணங்களிலே பல விமர்சனங்களை அவர் சந்திக்க வேண்டியதாயிற்று. பல முன்னாள் வீரர்களும் அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது, விராட் கோஹ்லி தனது மனைவியுடன் இங்கிலாந்தில் இருந்தது, ரவிசாஸ்திரி எதோ ஒரு பெண்ணுடன் இங்கிலாந்தில் சுற்றிவருவது பலரால் மிகவும் விமர்சிக்கபட்டது.
அணி தேர்வில் சர்ச்சை :
வழக்கம் போல கேப்டன் தனக்கு சாதகமான வீரர்களுக்கே வாய்ப்பு தருகிறார் என்பன போன்ற கருத்துக்களும் வந்தவண்ணம் உள்ளது. அதற்க்கு ரவி சாஸ்திரியும் துணை நிற்கிறார் என்ற கருத்தும் நிலவி வருகிறது. அதில், ராகுல்க்கு, தொடர்ச்சியான வாய்ப்பு, டோனியன் நீக்கம், எனப் பல நிகழ்வுகள் உள்ளன.
தற்போது நடக்கும் ஆஸ்திரேலிய தொடரிலும் இதைக் காணமுடிகிறது என பலர் குற்றம்சாட்டுகின்றனர். இரண்டாவது டெஸ்ட் தோல்வியின்போது கோஹ்லி " ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு தரும் காரணத்தினால், ஜடேஜாவை அணியில் சேர்க்கவில்லை " எனக் கூறினார்.
ஆனால் தற்போது ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் " அவர் 80 சதவிகித உடல்தகுதியுடன் தான் இருந்தார் அதன் காரணமாகவே அவரை அணியில் சேர்க்கவில்லை " எனக் கூறினார்.
இப்படி அணி தேர்வுபற்றி இருவரும் மாறி மாறி கருத்து தெரிவிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புவனேஷ்வர் குமார், ஜடேஜா, ரோஹித் சர்மா, அஸ்வின் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் காயமடைந்துள்ளனர். இந்த செய்தியை அவர்கள் வெளிப்படுத்தத் தவறியது ஏன் எனக் கேள்விகள் வருகின்றது. இந்தியா அணியில் 19 வீரர்கள் உள்ளனர் ஆனால் விளையாடத் தகுந்தவர்கள் 13 பேர் மட்டுமா எனவும் வினவுகின்றனர்.
எனவே தான் சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில் " தற்போது இந்தியா அணி ஆஸ்திரேலியாவை வென்று காட்டாவிட்டால், அணியில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்" எனக் கூறியுள்ளார்.
அவர் குறிப்பிடுவது விராட் கோஹ்லியின் டெஸ்ட் கேப்டன் பதவி மற்றும் பயிற்சியாளர் பதவி பற்றித்தான் என முணுமுணுக்கின்றனர் .