ஐபிஎல் 2019-க்கான சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில். அந்தந்த அணிகளின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.
கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரின் மூலம் பல உள்ளூர் மற்றும் வெளியூர் வீரர்கள் மோசமான பார்மில் இருந்தாலும் ஐபிஎல்-லில் நன்றாக செயல்பட்டு தங்களது அணிகளில் இடம் பிடிப்பர். அவ்வகையில் ஐபிஎல்-ன் மூலம் சர்வதேச தரத்திற்கு உயர்ந்த ஒரு வீரர் யார் என்றால், ஷேன் வாட்சனை நினைவுக்கூறலாம்.
மோசமான ஆட்ட வெளிப்பாட்டினால் ஆஸ்திரேலிய அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ஷேன் வாட்சன், ஐபிஎல் 2008 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதால் ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம் பிடித்தார். ஐபிஎல் தொடர் ஒரு சில வீரர்களுக்கு லாவகமாக அமைந்தாலும், சில வீரர்களுக்கு பாதகமாக உள்ளது.
அவ்வகையில் சர்வதேச கிரிக்கெட் உலகில் கொடிகட்டி பறந்த கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சொதப்பியதும் உண்டு. அவ்வாறு ஐபிஎல் தொடரில் சொதப்பிய 4 சர்வதேச கிரிக்கெட் வீரர்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
#3. சனத் ஜெயசூரியா
இலங்கை அணியின் ஜாம்பவானாக விளங்கும் சனத் ஜெயசூர்யா, அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவர். அவர் ஆடிய காலகட்டத்தில் ஸ்ட்ரைக் ரேட் ஒரு பொருட்டாக இல்லாத நிலை இருந்தது. அந்த காலகட்டத்தில் 75 ஸ்ட்ரைக் ரேட் போதுமானதாக கருதப்பட்டது. ஆனால் அந்த காலகட்டத்திலேயே இவரின் ஸ்ட்ரைக் ரேட் 91-ஆக இருந்தது. எதிரணி பந்துவீச்சாளர்கள் இவருக்கு பந்து போட அஞ்சும் வகையில் இவரது பேட்டிங் சக்கைப்போடு போடும்.
அந்த காலகட்டத்தில் மிக வேகமாக அடித்த அரை சதம்(17 பந்துகள்) மற்றும் முழு சதம்(48 பந்துகள்) இவர் வசம் தான் இருந்தது. ஐபிஎல்லின் முதல் சீசனில் (2008 ஆம் ஆண்டு) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக சனத் ஜெயசூர்யா விளங்கினார்.
ஆனால் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமே அளித்தது. மும்பை இந்தியன்ஸ்காக இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 768 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரது சராசரி 70 ஆகும். ஐபிஎல் நான்காவது சீசன் முதல் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அதிலிருந்து அவரின் ஐபிஎல் கேரியர் முடிவுக்கு வந்தது.
#3. பிரெட் லீ
2001-2010 க்கு இடைப்பட்ட கிரிக்கெட் காலகட்டத்தில் வேகம் என்றாலே பிரெட் லீ என்று பொருள் தருவது போல தனது பந்துவீச்சின் வேகத்தினால் உலக கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்தார். ஆஸ்திரேலியா அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். வேகம், துல்லியம் என பந்துவீச்சில் தனக்கான தனித்துவத்தால் உலக கிரிக்கெட் அரங்கில் முத்திரை பதித்தார்.
2008 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடிய பிரெட் லீ, ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நல்ல ஆட்டத்திறனுடன் விளங்கியதால் இவர் மீது பஞ்சாப் அணிக்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் பொய்த்துப் போகவே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருந்தார் பிரெட் லீ.
இதுவரை 38 ஐபிஎல் போட்டிகளில் களம் கண்டுள்ள பிரெட் லீ வெறும் 25 விக்கெட்டுகளை சாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது ஐபிஎல் சராசரி 43.8, சர்வதேச சராசரியை விட இது இரண்டு மடங்கு அதிகம்.
ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு அணிகளுக்காக பிரெட் லீ விளையாடி உள்ளார். முதலில் பஞ்சாப் அணிக்காக விளையாட பிரெட் லீ, தனது கடைசி ஐபிஎல் காலகட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்,
#2. ஈயோன் மோர்கன்
ஈயோன் மோர்கன் தற்போதைய இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன். உலக கிரிக்கெட் வீரர்களின் இவருக்கான தனியிடமுண்டு, காரணம் இவர் ஆடும் தனித்துவமான ஷாட்கள். பந்தை கடினமாக எதிர்கொள்ளும் வீரர்களில் இவரும் ஒருவர். இங்கிலாந்து டி20 அணியில் இவரின் பங்கு அளப்பரியது. 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி டி20 கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மோர்கன். இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டரில் சிறந்த வீரராக பங்காற்றி வருகிறார் மோர்கன்.
சர்வதேச ஆட்டத்திறனை ஐபிஎல் தொடரில் மோர்கனால் வெளிக்கொணர முடியவில்லை. இதுவரை 52 போட்டிகளில் களம் கண்டுள்ள மோர்கன் வெறும் 854 ரன்களை எடுத்துள்ளார். இவரின் சராசரி 21.35 ஆகும். ஐபிஎல் தொடரில் இதுவரை நான்கு வெவ்வேறு அணிகளுக்கு (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் XI பஞ்சாப்) விளையாடியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் இவரை எவரும் எடுக்க முன்வரவில்லை, காரணம் உலக கோப்பையில் கவனம் செலுத்தும் வகையில் இவர் பெரும்பாலான போட்டிகளுக்கு கிடைக்கப் பெற மாட்டார் என்று அணி நிர்வாகிகள் நினைத்தார்களோ என்னவோ?.
#1. ரிக்கி பாண்டிங்
இந்தப் பட்டியலில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ரிக்கி பாண்டிஙின் பெயர் இடம் பெற்றுள்ளது. முதன்முதலாக சர்வதேச டி20 போட்டிகள் அறிமுகம் கண்டபோது அதில் முதல் ஆளாக களம் கண்ட வீரர் ரிக்கி பாண்டிங். நியூசிலாந்துக்கு எதிராக நடந்த அந்தப் போட்டியில் அதிரடி ஆட்டம் கண்ட ரிக்கி பாண்டிங் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
காலம் கடந்து செல்லவே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டத்திறனை பெற்றிருந்த பாண்டிங், அந்த திறனை டி20 தொடரில் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இதுவரை 43 டி20 இன்னிங்சில் களம் கண்டுள்ள ரிக்கி பாண்டிங் 909 ரன்களை எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரை பொருத்தமட்டில், இதுவரை 10 போட்டிகளில் மட்டுமே களம் கண்டுள்ள ரிக்கி பாண்டிங் 91 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் சராசரி 10.11 ஆகும். பாண்டிங் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் சிறிது காலம் பதவி வகித்தார். தற்போது டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.