உலக கோப்பை தொடர் துவங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், சில ஆட்டங்கள் எதிர்பாராதவிதமாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தன. இம்முறை நடைபெறும் உலக கோப்பை தொடரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் தொடரை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. இதுவரை நடைபெற்ற உலக கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்களை கைப்பற்றியவர்களில் மூன்றில் இருவர் வேகப்பந்துவீச்சாளர்களாக உள்ளனர். எனவே, உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை கைப்பற்றி மூன்று பந்துவீச்சாளர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.கிளைன் மெக்ராத்:
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்துள்ளார், கிளன் மெக்ராத். இவர் இதுவரை 4 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்று 39 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவற்றில் 71 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இரு முறை ஒரே போட்டியில் 5 விக்கெட்களையும் ஒன்பது முறை 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் 18 விக்கெட்களை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி தங்களது இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு துணைபுரிந்தார். 2003ம் ஆண்டு 21 விக்கெட்டுகளை எடுத்து தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய மூன்றாவது சிறந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். அதே தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் 26 விக்கெட்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்வதற்கு பாடுபட்டுள்ளார்.
#2.முத்தையா முரளிதரன்:
அனைத்து கால கிரிக்கெட்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை 40 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவற்றில் 11 வெவ்வேறு போட்டிகளில் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இதுவரை ஐந்து உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள இவர், 1996 ஆம் ஆண்டு முதல் விளையாடி வந்துள்ளார். தான் விளையாடிய முதல் உலக கோப்பை தொடரில் இலங்கை அணி கோப்பையை வென்றுள்ளது. அந்த தொடரில் 6 போட்டியில் விளையாடி வெறும் 7 விக்கெட் மட்டுமே இவர் கைப்பற்றினார். 1999 ஆண்டு நடைபெற்ற தொடரிலும் 5 போட்டியில் விளையாடி 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றமளித்தார். இருப்பினும், 2003ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 10 போட்டியில் விளையாடி 17 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர், 2007-இல் 10 போட்டியில் விளையாடி 23 விக்கெட்களை கைப்பற்றி தமது சிறந்த தொடராக அளித்தார். இவரது அபார ஆட்டத்தால் இலங்கை அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இறுதியாக 2011ம் ஆண்டு தொடரிலும் முந்தைய தொடரை போல சிறப்பாக செயல்பட்டுள்ளார் இதுவரை 534 விக்கெட்களை கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை தன் வசம் வைத்துள்ளார், முத்தையா முரளிதரன்.
#3.வாசிம் அக்ரம்:
சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் தொடர்கிறார். இவர் பாகிஸ்தான் அணிக்காக ஐந்து முறை உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். அவற்றில் 38 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 1987 ஆம் ஆண்டு தனது முதலாவது உலக கோப்பை தொடரில் விளையாடிய இவர், வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அதன் பின்னர், தமது தவறுகளைத் திருத்திக் கொண்டு 1992ஆம் ஆண்டு 18 விக்கெட்களை கைப்பற்றி முதன்முதலாக தமது அணி கோப்பையை வெல்வதற்கு பாடுபட்டார். 1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தனது ஆதிக்கத்தை செலுத்த தவறினார். மீண்டும் ஒரு முறை 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரிலும் 15 விக்கெட்களை கைப்பற்றி தங்களது அணி இறுதிப்போட்டிக்கு வரை முன்னேற சிறப்பாக செயல்பட்டார். 2003இல் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார், வாசிம் அக்ரம் .ஒருநாள் போட்டி வரலாற்றில் 502 விக்கெட்களை கைப்பற்றி அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார், வாசிம் அக்ரம்.