உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று, இந்திய அணி. 1983ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்திய இளம் கேப்டன் கபில்தேவ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். இதன் மூலம், கிரிக்கெட் வரலாற்றில் புதிய ஒரு சரித்திரம் படைக்கப்பட்டது. பின்னர், 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணியை "மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கரின் உதவியுடன் இறுதிப் போட்டி வரை அணியை அழைத்துச் சென்றார், சவுரவ் கங்குலி. இருப்பினும், இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார், மகேந்திர சிங் தோனி. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை வென்று அசத்தியது இந்திய அணி. 2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே, மீண்டும் ஒரு முறை கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் தற்போது கைகூடியுள்ளது. எனினும், பலரும் அறிந்திராத இந்திய வீரர்களால் படைக்கப்பட்ட சில சாதனைகளை இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#1.பிஷன் பேடியின் மெய்டன் ஓவர்கள்:
1970 காலகட்டத்தில் இந்திய அணியின் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர், பஞ்சாபைச் சேர்ந்த பிஷன் பேடி. இவர் தமது துல்லியமான சுழற்பந்து வீச்சு தாக்குதலால் எதிரணி விக்கெட்களை எளிதாகவே வீழ்த்தி வந்தார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய காரணத்தினால் ஒருநாள் போட்டிகளில் போதிய அளவிற்கு விளையாடவில்லை. 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக இடம் பெற்ற இவர் கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இரு மெய்டன் ஓவர்களை வீசி சாதனை படைத்தார். இதுவரை உலக கோப்பை போட்டியில் எந்த ஒரு பந்து வீச்சாளரும் இரு மெய்டன் ஓவர்களை வீசியதில்லை.
#2.சவுரவ் கங்குலியின் பார்ட்னர்ஷிப் சாதனைகள்:
இந்தியாவின் தாதா என்று வர்ணிக்கப்படும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, அக்காலத்தில் மிக ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய வீரர் ஆவார். மறைந்த முன்னாள் கேப்டன் அஜித் வடேகருக்கு பிறகு அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டனாக திகழ்ந்தார், சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் சிறந்த கிளாசிக் மற்றும் இடது கை பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார் சவுரவ் கங்குலி. இதுவரை விளையாடியுள்ள 311 ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களை அடித்துள்ளார். 1999ஆம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இவர் விளையாடியுள்ளார் அவற்றில் 2003ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். உலக கோப்பை வரலாற்றில் இவர் சில வீரர்களுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் மும்முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். 1999ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் உடன் இணைந்து 318 ரன்களையும், 2003ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து 244 ரன்களையும் 2007ஆம் ஆண்டு விரேந்திர சேவாக் உடன் இணைந்து 202 ரன்களையும் இவர் குவித்துள்ளார்.
#3.இளம் வயதில் சதங்களை குவித்த சச்சின் டெண்டுல்கர்:
ஒருநாள் கிரிக்கெட்டில் படைக்கப்பட்ட 50 சதவீத சாதனைகளை "மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கர் புரிந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக இளம் வயதிலேயே இவர் கிடைத்தது வரப்பிரசாதமாகும். தனது 16வது வயதில் இந்திய அணிக்காக அறிமுகம் கண்டார், சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார், சச்சின் டெண்டுல்கர். இவர் இதுவரை 6 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்று உள்ளார். அதிக உலக கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை பாகிஸ்தானின் ஜாவீத் மியாண்டட் உடன் இணைந்து பகிர்ந்துள்ளார். 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று அதிக ரன்களை குவித்தது, இவரின் மிகச்சிறந்த தொடராக இந்நாள்வரை கருதப்படுகிறது. 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம் பெற்றார். உலக கோப்பை தொடர்களில் 20 வயதுக்கு முன்னரே இரு ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.