சொந்த மண் என்பது அனைத்து விளையாட்டிலும் அந்தந்த அணியனருக்கு மிகவும் சாதகமான ஒன்றாகும். அதிகளவு ரசிகர்கள் தங்களது மண்ணின் மைந்தர்களின் ஆட்டத்திறனை காண ஆடுகளத்திற்கு படையெடுத்து அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுவர். இது சொந்த மண் அணிக்கு மிக்க சாதகமாக இருக்கும்.
கிரிக்கெட்டில் இந்த ஊக்கம் கண்டிப்பாக ஒரு அணிக்கு தேவையான ஒன்றாகும். ஒவ்வொரு நாட்டிலுள்ள மைதானங்களிலும் வெவ்வேறான காலநிலை மற்றும் ஆடுகள தன்மை வேறுபடும். வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம், ஆடுகளத்தின் இயற்கை தன்மை, ஆடுகள அளவீடுகள் ஆகியவை வெவ்வேறு நாடுகளில் உள்ள மைதானங்களில் வேறுபட்ட தன்மையுடன் காணப்படும். உதாரணமாக இந்திய கண்டங்களில் உள்ள மைதானங்களில் சற்று இலகிய நிலையில் ஆடுகளங்கள் காணப்படும். எனவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முழுவதும் சாதகமாக இருக்கும். அதிக பவுண்சி ஆடுகளமாக திகழும் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா மைதானங்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆடுகளங்களில் ஸ்விங் ஃபிட்சாக இருக்கும் என்பதால் பந்து பெரும்பாலும் பேட்ஸ்மேன்களை விட்டு சற்று அகல திசையில் செல்லும். பெரும்பாலும் மற்ற நாடுகளில் இவ்வாறு இருப்பது மிகவும் குறைவு.
இதுவே உலகக் கோப்பை தொடரில் சொந்த மண் அணிகள் உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்திருக்கும். கடந்த காலங்களில் வரும் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடுகள தன்மையை சொந்த மண் வீரர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பர். ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை நடந்த 11 சீசனில் 3முறை சொந்த மண்ணில் களம் கண்ட அணிகள் உலகக் கோப்பையை தட்டிச் சென்றுள்ளன. நாம் இங்கு அந்த அணிகளைப் பற்றி காண்போம்.
#1 இலங்கை (1996)
1996 உலகக் கோப்பை தொடரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இனைந்து நடத்தின. அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இரண்டாவது முறை உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. ஆனால் இலங்கை மண்ணில் முதல் முறையாக உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு லாகூர்-ரில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. தற்போது வரை இந்த ஒரு உலகக் கோப்பை மட்டுமே இலங்கை வசம் உள்ளது.
இலங்கை அணிக்கு குழு தகுதிச் சுற்றில் மிகவும் சாதகமான நிகழ்வு ஒன்று நடந்தது. ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பாதுகாப்பின்மையால் கொலும்பு-வில் சென்று லீக் போட்டிகளில் பங்கேற்க மறுத்தது. இதனால் இலங்கை அணி இரு போட்டிகளிலும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை அரையிறுதியில் இந்தியாவை ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொண்டது. இலங்கை வீரர்கள் இந்திய ரசிகர்கள் முன்னிலையில் தங்களது ஆதிக்கத்தை சிறப்பாக செயல்படுத்தினர். ஈடன் மைதானம் இந்திய அணியினருக்கு சிறிது கூட உதவவில்லை. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 252 ரன்களை குவித்தது. இந்திய அணி சேஸிங்கில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் 523 ரன்களை விளாசி அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார், அதேபோல் அணில் கும்ளே 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
#2 இந்தியா (2011)
2011ஆம் ஆண்டு அனைத்து இந்தியர்களாலும் மறக்க முடியாத வருடமாகும். உலக கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி விளாசிய மேட்ச் வின்னிங் சிக்ஸர் மீண்டும் மீண்டும் நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
2011 உலகக் கோப்பை போட்டியை நடத்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் 2009 ஆம் ஆண்டில் இலங்கை வீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகளில் தாக்குதலில் சிக்கினர். இதனால் பாகிஸ்தான் அணி சர்வதேச போட்டிகளை தனது நாட்டில் நடத்தும் உரிமை பறிக்கப்பட்டது. இதனால் இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் நடத்த திட்டமிட்டிருந்தன.
இரு சொந்த மண் அணியான இந்தியா மற்றும் இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இரு ஆசிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதியதும் இதுவே ஆகும்.
இதன் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 2011 ஏப்ரல் 11 அன்று நடந்தது. இலங்கை கேப்டன் குமார் சங்கக்காரா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஜெயவர்த்தனே-வின் சிறப்பான சதத்தினால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இது இந்திய அணிக்கு சேஸிங்கில் ஒரு வாய்ப்பாக அமைந்தது!
இந்திய அணி மிகவும் மோசமாக ஆரமித்தனர். ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே விரேந்தர் சேவாக் தனது விக்கெட்டை இழந்தார். சச்சின் டெண்டுல்கருக்கு அந்த நாள் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவரும் நடையைக் கட்டினார். அதன்பின் இளம் வீரர் விராட் கோலி களமிறங்கி கௌதம் காம்பீருடன் இனைந்து விளையாட தொடங்கினார். இருவரும் இனைந்து இந்திய அணியை மீட்பதற்கான முயற்சியை தொடங்கினர். விராட் கோலி தனது விக்கெட்டை இழப்பதற்கு முன்பாக காம்பீருடன் இனைந்து 83 ரன்கள் பார்டனர் ஷீப் செய்து விளையாடி இந்திய அணியின் ரன்களை 114 ஆக உயர்த்தினர்.
மகேந்திர சிங் தோனி நம்பர் 5 பேட்ஸ்மேனாக களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை காம்பீருடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். இருவரும் இனைந்து 109 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடினர். காம்பீர் 97 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த பேட்ஸ்மேனாக யுவராஜ் சிங் களமிறங்கும் போது இந்திய அணி வெற்றி பெற 52 பந்துகளுக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி விக்கெட்டுகள் ஏதும் விடாதவாறு நிதானமாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததது. எம்.எஸ்.தோனி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிபடுத்த ஆரம்பித்தார். யுவராஜ் சிங் அவருக்கு தகுந்தவாறு கை கொடுத்து விளையாடினார். தோனி 79 பந்துகளை எதிர்கொண்டு 92 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு தனது இரண்டாவது உலகப் கோப்பையை வென்றது.
யுவராஜ் இந்த உலகக் கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
தில்கரத்னே தில்ஷான் 500 ரன்களை இந்த தொடரில் விளாசி அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். ஷாஹீத் அஃப்ரிடி, ஜாஹீர் கான் ஆகியோர் தலா 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.
#3 ஆஸ்திரேலியா (2015)
2015 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகள் நடத்தின. இரண்டாவது முறையாக இந்த இரு அண்டை நாடுகளும் உலகக் கோப்பை தொடரை நடத்தின.
இரு அணிகளுமே 2015 உலகக்கோப்பை தொடரில் தகுதிச் சுற்று மற்றும் அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப் போட்டி தொண்ணுற்று மூன்றாயிரம் கிரிக்கெட் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இது ஒரு சாதனை முறியடிப்பாக பார்க்கப்பட்டது. நியூசிலாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு இது ஏழாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகும்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததது. ஆஸ்திரேலிய அணியின் வலிமையான பௌலிங்கினால் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலிய அணி இதனை எளிதாக சேஸ் செய்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்ததது.
மார்டின் கப்தில் 547 ரன்களை விளாசி அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இதில் காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கப்தில் இரட்டை சதம் விளாசினார். மிட்செல் ஸ்டார்க், டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்கள்.