கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் குறிப்பிட்ட வயதுவரை உள்ள வீரர்கள் மட்டுமே விளையாட முடியும். ஒரு எல்லையை தாண்டும் போது அவர்களே விளையாட நினைத்தாலும் அவர்களின் உடல் அதற்கு ஒத்துழைக்காது. இருந்தாலும் ஒருசில வீரர்கள் நல்ல பார்மில் இருக்கும் போதே திடீரென ஓய்வினை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். சமீபத்தில் கூட பாகிஸ்தான் அணியின் முகமது அமீர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு வயது வெறும் 28 தான். இதேபோல ரசிகர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடிய விரைவில் ஓய்வு பெற்ற வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்..
#4) மைக்கேல் கிளார்க்
கிரிக்கெட் ஜாம்பவான்களின் பட்டியலை நாம் எடுத்து பார்த்தல் அதில் மைக்கேல் கிளார்க்-க்கு முக்கிய இடமுண்டு. இவர் ஆத்திரேலியா அணியின் கேப்டனாக 2015 உலககோப்பையையும் வென்று தந்தது குறிப்பிடத்தக்கது. இவர் 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்த இவர் அணைத்து வகையான போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். ஆஸ்திரேலியாவுக்காக இவர் பல சாதனைகளையும் படைத்துள்ளார். ரிக்கி பாண்டிங் ஓய்வு பெற்ற பின் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார் இவர். 2013-14-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியை வாஷ் அவுட்டாக்கி 4 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியை தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார் கிளார்க். 360 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 16624 ரன்கள் குவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு இவர் தனது ஓய்வினை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இவர் ஓய்வு பெறும் போது இவரின் வயது வெறும் 34 தான்.
#3) கிராக் கிஸ்வீட்டெர்
இங்கிலாந்து அணிக்கு விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் கிராக் கிஸ்வீட்டெர். இவர் தனது சர்வதேச போட்டிகளுக்கு நல்ல துவக்கம் தந்தார். 2010-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிக்கு போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்று அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அந்த உலககோப்பைக்கு பின் இவர் இங்கிலாந்து அணிக்கு நிரந்தர வீரராக மாறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் இவர் கவுண்டி போட்டிகளில் விளையாடி வந்தார். 2014 ஆம் ஆண்டு டேவிட் வில்லி வீசிய பவுன்சரால் தலையில் தாக்கப்பட்ட இவரின் மூக்கு உடைக்கப்பட்டது. இதனால் முகத்தில் இவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் இவர் கிரிக்கெட் விளையாட வந்தார். ஆனால் தலையில் பந்து தாக்கியதால் இவரின் பார்வைத்திறன் பாதித்தது. இது இவரால் கிரிக்கெட் போட்டிகளில் சரியாக விளையாட முடியாத நிலையை ஏற்படுத்தியது. இதனால் தனது 27 வயதிலேயே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்தார் இவர். அதன் பின்னும் சளைக்காத இவர் கோல்ப் போட்டிகளில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார். இதன் மூலம் தற்போது சிறந்த கோல்ப் வீரராகவும் உருவெடுத்துள்ளார் கிஸ்வீட்டெர்.
#2) ஜேம்ஸ் டெய்லர்
ஜேம்ஸ் டெய்லர் 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். இருந்தாலும் இவருக்கு அணியில் சரியான இடம் கிடைக்கவில்லை. 2015 உலகக்கோப்பை அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரில் கூட இவர் துவக்கவீரராக களமிறங்கி 98 ரன்கள் விளாசினார். ஆனால் அந்த போட்டியோ இங்கிலாந்து அணிக்கு தோல்வியில் முடிந்தது. அதன் பின் மீண்டும் இவரால் அணியில் தனது இடத்தினை நிரந்தரமாக்கி கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி பயிற்சியின் பொது ஏற்பட்ட காயம் இவரின் கிரிக்கெட் வாழ்வினை 26 வயதிலேயே முடிவுக்கு கொண்டு வந்தது.
#1) மார்க் பவுச்சர்
இவரை தெரியாத கிரிக்கெட் ரசிகர் இருக்க முடியாது. கிரிக்கெட் வரலாற்றிலேயே விக்கெட் கீப்பராக பல சாதனைகளை படைத்துள்ளார் இவர். இன்று வரை தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இவர் தான். 15 ஆண்டுகளாக இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். விக்கெட் கீப்பராக மட்டுமல்லாமல் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் தென்னாபிரிக்க அணியை பல முறை வெற்றி பெற வைத்துள்ளார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் பெயில் இவர் கண்ணில் தாக்கியதால் அப்போதே காலத்திலிருந்து வெளியேறினார் இவர். அதன் பின்னரும் இவருக்கு அதன் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த தொடரே அவருக்கு கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. இவர் அப்போது ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் மட்டுமல்லாமல் அணி வீரர்களும் .எதிர்பார்க்கவில்லை.