இந்த வருடத்திற்கான ஐபிஎல் திருவிழா வருகிற மார்ச் மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான பயிற்சியை ஐபிஎல் அணிகள் ஆரம்பித்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் போட்டிகளை விளம்பரப்படுத்தவும், சுவாரஸ்யப்படுத்தவும் கூடிய வேலைகளை தற்போதே சில அணிகள் தொடங்கிவிட்டன. அதில் தற்போதைய ஒரு சுவாரசியமான டுவிட்டர் மோதல் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அணிகளில் ஒன்று ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணி. (இது முன்னதாக ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ என அழைக்கப்பட்டது. இந்த வருடம் ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
இந்த வீடியோவில் ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ‘ரிஷாப் பாண்ட்’ இடம் பெற்றுள்ளார். அதில் பாண்ட் மைதானத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு கையில் புத்தகம் ஒன்றை வைத்திருக்கிறார். புத்தகத்தின் தலைப்பாக ‘தோனி மை ஹீரோ’ என எழுதப்பட்டுள்ளது.
மேலும் அவர் “தோனி தான் எனக்கு குரு. அவர் இல்லையென்றால் நான் இந்த அளவிற்கு ஒரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மனாக வளர்ந்து இருக்க மாட்டேன்” என தோனியின் புகழ் பாடுகிறார். மேலும் அவர் பேசுகையில், “இந்த ஐபிஎல் போட்டியில் தோனியின் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட தயாராக உள்ளேன். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் தோனியை இந்த முறை கூலாக இருக்க விட மாட்டேன்” என சவால் விடும்படி அந்த வீடியோ முடிகிறது.
இது போட்டியை சுவாரசியபடுத்த எடுக்கப்பட்ட வீடியோ என்றாலும் இது தோனி மற்றும் சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனே இதற்கு சிறப்பான பதிலடியை ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி கொடுத்துள்ளது.
அதன்படி ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ (சி.எஸ்.கே) தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்ட டுவீட்டில், சமீபத்தில் வெளிவந்த ‘பேட்ட’ திரைபடத்தில் நடிகர் ரஜினிகாந்த் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
‘ரிஷாப் பாண்ட்’க்கு பதிலடி தரும் வகையில் இதனை ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ வெளியிட்டுள்ளது. இது ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சி.எஸ்.கே ரசிகர்கள் இதனை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
வருகிற மார்ச் 23-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி ‘பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்’ அணியை எதிர்த்து போட்டியிடுகிறது. மேலும் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ மற்றும் ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ இடையேயான போட்டி மார்ச் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
தற்போது தோனி மற்றும் ரிஷாப் பாண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் டி-20 போட்டி தொடரில் ஒன்றாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.