ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான அணி என்று கூறினால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். ஏனெனில், ஐபிஎல் தொடங்கிய காலம் முதலே தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, இந்த சென்னை அணி.3 ஐபிஎல் பட்டங்கள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களே இந்த அணியின் பெருமையை எடுத்துரைக்கின்றது.இரண்டு வருட தடைக்கு பின்னர் மீண்டு வந்து கோப்பையையும் வென்றுள்ளது, இந்த சென்னை சூப்பர் கிங்ஸ். தோனியை போன்ற சிறந்த கேப்டனை கொண்ட ஒரு தகுந்த தலைமையும் திறமையுள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்கும் சாதுரியமும் கூட இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணமாய் உள்ளது. சென்னை அணியில் சர்வதேச டி20 அனுபவமுள்ள வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், அணி நிர்வாகம், ஏலத்தில் அவர்கள் போன்ற வீரர்களுக்கு அதிக தொகைக்கு போட்டியிட்டதில்லை. மாறாக, உள்ளூர் மற்றும் டிஎன்பிஎல் போட்டிகளில் ஜொலிக்கும் திறமை உள்ள வீரர்களை எடுக்கவே அதிகளவில் ஆர்வம் காட்டப்படுகின்றது. சர்வதேச மற்றும் இந்திய வீரர்களின் ஒருங்கிணைந்த பங்கு அணியின் ஆடும் லெவனில் என்றுமே இருந்து வருகிறது.குறிப்பாக, குறைந்த தொகையில் ஏலத்தில் எடுக்க பட்ட வீரர்கள் அந்த தொடரின் நாயகர்களாக மாறியுள்ளனர். எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட அம்பத்தி ராயுடு, அந்த தொடர் முழுவதுமே விளையாடி அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்று, கோப்பையை வெல்ல காரணமாகவும் அமைந்தார். அது போன்ற குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு அணிக்கு பெரும் பயனளித்த வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
3. லுங்கி இங்கிடி:
சர்வதேச போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்காக ரபாடாவுடன் இணைந்து தனது பவுலிங் தாக்குதலால் பெயர் பெற்றவர் இந்த லுங்கி. இந்த வருடம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அடையாளம் காணப்பட்டார். 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில், தனது முதல் சர்வதேச போட்டியிலே ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும், அந்த தொடரில் சாதாரணமாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசி அசத்தினார். சென்னை அணி நிர்வாகமும் ஒரு சிறந்த பந்து வீச்சாளரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டது. இதனால், ஏலத்தில் சென்னை அணியை பெரிதும் ஈர்த்த இவரை வேறு எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனால், 50 லட்சம் என்ற அடிப்படை தொகையில் சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது பந்துவீச்சு எக்கானமி 6 ரன்களுக்கு மிகாமல் வைத்து அசத்தினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்ததே இவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். இளம் வீரரான இவர் தொடர்ந்து பல ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கலாம்.
2. அம்பத்தி ராயுடு :
ஐபிஎல் நட்சத்திர வீரர்களில் ஒருவர், அம்பத்தி ராயுடு. 2010 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். மும்பை அணிக்காக தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாடிய போதிலும் கடந்த முறை மும்பை அணி நிர்வாகம் இவரை விடுவித்தது. இதன் காரணமாக, ஐபிஎல் ஏலத்திற்கு வந்த இவர், சென்னை அணிக்காக 2.2 கோடிக்கு ஏலம் போனார். முதன் முறையாக சென்னை அணிக்காக விளையாடிய இவர், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் வாட்சன் உடன் இணைந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்தார். இந்த தொடக்க இணை, தொடர் முழுவதுமே எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து, அணிக்கு ரன்களை குவித்தது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு, 16 போட்டிகளில் விளையாடி மொத்தம் 602 ரன்களை குவித்து, 43 என்ற ஆவ்ரேஜ் உடன் 149.75 ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்திருந்தார். அதிகபட்சமாக 100* ரன்களுடன் ஒரு சதம் மூன்று அரை சதங்கள் குவித்து அசத்தினார்.2019- ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளிலும் இவரது சாதனை தொடரும்.
1. ஷேன் வாட்சன் :
டி20 தொடரில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்றால் அவர் வாட்சன் தான். சர்வதேச அளவிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை நடைபெற்ற தொடர்களில் 117 ஆட்டங்களில் பங்கு பெற்றுள்ள இவர், 4 சதங்கள் 16 அரைசதங்கள் உட்பட மொத்தம் 3177 ரன்களையும் 92 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார்.2017-ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக 9.5 கோடிக்கு ஏலம் போன இவர் அந்த அணியால் 2018-இல் விடுவிக்கப்பட்டார். அந்த ஏலத்தில் இவரை எடுக்க சென்னை, பெங்களூரு, டெல்லி அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.இறுதியில், சென்னை அணிக்காக 4 கோடிக்கு ஒப்பந்தம் ஆனார். அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு, மறக்கமுடியாத ஒரு தொடரை சென்னை அணி ரசிகர்களுக்கு அளித்தார். தொடரில் 15 போட்டிகளில் களமிறங்கி இரண்டு சதங்கள் இரண்டு அரை சதங்கள் உட்பட மொத்தம் 555 ரன்களை குவித்தார். மேலும் பந்துவீசி ஆறு விக்கெட்களையும் எடுத்தார்.தொடரில் இவர் அளித்த மிகச் சிறந்த இன்னிங்ஸ் என்றால், இறுதிப்போட்டியில் சதம் அடித்து அணியை கோப்பையை வெல்ல காரணமாக இருந்ததே. சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தன் திறமை குறையவில்லை என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார், இந்த வாட்சன்.
எழுத்து: அஸ்வின் சீனிவாசா
மொழியாக்கம்: சே. கலைவாணன்