2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்று கருதப்படுவது தமிழகத்தைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கு காரணம் அந்த அணி கடந்த பதினோரு ஆண்டுகளாக அதன் முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது தான். மேலும் தான் விளையாடிய அனைத்து சீசன்களிலும் கேப்டனை மாற்றாத ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.
2008 ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் போட்டி தொடரில் சென்னை அணியின் கேப்டனாக எம் எஸ் தோனி நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் சென்னை அணி 3 ஐபிஎல் தொடர்களையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்களையும் பெற்றுள்ளது. சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஒரு ஆட்டம் தவிர சென்னை விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் விளையாடி உள்ளார்.
சென்னை அணி வெற்றிகரமாக இருப்பதற்கு மற்றுமொரு காரணம் அதன் முக்கிய வீரர்களான பிராவோ, ஜடேஜா,டூ ப்லெஸிஸ் போன்றவர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது தான். மேட்ச் பிக்சிங் காரணமாக சென்னை அணியை இரண்டு வருடம் ஐபிஎல் விளையாட நீதிமன்றம் தடைவிதித்தது.
2018 ஆம் ஆண்டு தடை காலம் முடிந்த பின் நடந்த ஐபிஎல் தொடரை சென்னை அணி வென்றது. 2019 ஆம் ஆண்டு வீரர்கள் ஏலத்தில் சென்னை அணி மோஹித் சர்மா மற்றும் ருத்துராஜ் கைக்கவாட் என்ற 2 வீரர்களை வாங்கியுள்ளது.
இந்த தொகுப்பில் சென்னை அணியின் ஆடும் 11இல் எவ்வாறு இருக்கும் என்பதை காண்போம்
1)துவக்க வீரர்கள் (அம்பதி ராயடு மற்றும் ஷேன் வாட்சன்)
2018 சென்னை அணி பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்கள் அணியின் துவக்க வீரர்கள் அம்பதி ராயடு மற்றும் ஷேன் வாட்சன். மும்பை அணியின் முக்கிய வீரராக இருந்த அம்பதி ராயுடுவை சென்னை அணி 2018 ஐபிஎல் ஏலத்தில் 2.20 கோடிக்கு வாங்கியது. மும்பை அணியில் மிடில் ஆர்டரில் பெரும்பாலும் விளையாடிய ராயடு, சென்னை அணியில் துவக்க வீரராக களமிரக்கப்பட்டர்.
அவருக்கு துணையாக ஏலத்தில் 4 கோடிக்கு வாங்கிய ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வாட்சன் விளையாடினார். இருவரும் பல ஆட்டங்களில் சென்னை அணிக்கு சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ராயுடு 16 ஆட்டங்களில் 602 ரன்கள் குவித்தார். இதில் 3 அரை சதங்களும் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 62 பந்துகளில் அடித்த சதமும் அடங்கும். ஷேன் வாட்சன் 15 போட்டிகளில் விளையாடி 555 ரன்கள் குவித்தார். ஐபிஎல் 2018-இல் வாட்சன் 2 சதம் விளாசினார். 7 வருடங்கள் தான் விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இறுதி போட்டியில் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்து சென்னை அணி மூன்றாம் முறையாக ஐபிஎல் பட்டம் வெல்ல உதவி புரிந்தார். மேலும் வாட்சன் தனது மித வேக பந்துவீச்சினால் 2018 ஐபிஎல்-லில் 6 விக்கெடுகள் வீழ்த்தியுள்ளார்.
இவர்களது சிறப்பாக ஆட்டத்தால் தமிழக வீரர் முரளி விஜய்க்கு ஆடும் 11இல் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனது.
மாற்று துவக்க வீரர்கள் : முரளி விஜய், டூ ப்லெஸிஸ்
2) மிடில் ஆர்டர் ( சுரேஷ் ரெய்னா, ஃபாப் டூ ப்லெஸிஸ், தோனி)
சென்னை அணியின் தூணாக இருப்பது மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் ஆக களமிறங்கி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஆட்டம் தவிர சென்னை அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார் ரெய்னா. 176 ஐபிஎல் போட்டிகளில் 4985 ரன்களை குவித்துள்ளார்.2018 ஐபிஎல் இல் 445 குவித்து சென்னை அணி ஐபிஎல் தொடரை வெல்ல உதவினார். எனவே அவர் சென்னை அணியின் ஒன் டவுன் வீரராக இந்த வருடமும் விளையாடுவார்.
தென் ஆப்ரிக்கா கேப்டன் ஃபாப் டூ ப்லெஸிஸ் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 6 சீன்களில் விளையாடியுள்ளார். சென்னை அணிக்காக 51 போட்டிககளில் விளையாடி 1243 ரன்கள் குவித்துள்ளார். சென்ற வருடம் வெறும் 6 போட்டிகள் விளையாடிய டூ ப்லெஸிஸ் 162 ரன்கள் எடுத்தார். முதலாவது குவாலிஃபயர் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் ஆடி 67 ரன்கள் குவித்து சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற செய்தார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2019 ஐபிஎல் தென் ஆப்ரிக்கா நாட்டில் நடைபெறும் என தெரிகிறது. எனவே உள்ளூர் வீரரான டூ ப்லெஸிஸ் சென்னை அணியின் ஆடும் 11 இல் இடம் பிடிப்பார் என நம்புகிறோம். அவர் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் தனது நாட்டு அணிக்கு செல்லும் பட்சத்தில் அவர் இடத்தை சாம் பிலிங்ஸ் நிரப்புவார்.
சென்னை அணியின் நம்பர் 5 ஆக களமிறங்க போவது அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தோனியின் சிறந்த ஐபிஎல் தொடராக அமைந்தது. சென்னை அணியை தலைமையேற்று 16 போட்டிகளில் விளையாடிய தோனி 455 ரன்களை குவித்தார், இதில் மூன்று அதை அரை சதங்களும் அடங்கும். தோனியின் பங்களிப்பு சென்னை அணியை பல ஆட்டங்களில் வெற்றி பெற செய்தது. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் அதற்குமுன் நடைபெறும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக செயல்பட்டு மீண்டும் ஃபார்முக்கு வருவார் என நம்புகிறோம்
மாற்று மிடில் ஆர்டர் வீரர்கள்: ஜெகதீசன், சாம் பிலிங்ஸ், துருவ் ஷோரே
3) ஆல் ரவுண்டர்கள்(கேதார் ஜாதவ், ட்வெயின் பிராவோ, ரவீந்திர ஜடேஜா)
கேதார் ஜாதவ் சென்ற முறை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய பொழுது அவருக்கு பின் தொடையில் இருக்கும் தசை நாரில் காயம் ஏற்பட்டது. இதனால் 2018 ஐபிஎல் இல் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சிக்கலான நேரத்தில் பந்து வீசி விக்கெட் வீழ்த்திவதில் வல்லவர் கேதார் ஜாதவ். சென்ற வருடம் போன்று இல்லாது இந்த வருடம் முழு ஐபிஎல் தொடரில் விளையாடி சென்னை அணியின் வெற்றிக்கு உதவி புரிவார் என்று நம்புகிறோம்.
ட்வெயின் பிராவோ கடந்த 8 ஆண்டுகளாக சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்துள்ளார். பல்வேறு சிக்கலான தருணத்தில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்துள்ளார். மேலும் சென்னை அணியின் 'டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்' என்று அழைக்கப்படுகிறார். ஆட்டத்தின் முக்கிய ஓவர்களில் பந்துவீசி பேட்ஸ்மேன் ரன் குவிப்பதை கட்டுப்படுத்துவதில் வல்லவர் பிராவோ. தற்பொழுது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பிராவோ 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஆடும் 11 இல் நிச்சயம் விளையாடுவார்.
2012 ஆம் ஆண்டு சென்னை அணி ரவீந்திர ஜடேஜாவை 9 கோடி கொடுத்து வாங்கியது. 2019 ஆம் ஆண்டு சென்னை அணி தக்கவைத்து கொண்ட மூன்று வீரர்களில் ஒருவரானார் ஜடேஜா. சிறிது காலம் இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணியில் இருந்து விலக்கப்பட்ட ஜடேஜா, தனது சிறப்பான ஆட்டத்தால் தற்பொழுது மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதிரடியாக விளையாடி சிக்ஸர் அடிப்பதில் ஜடேஜா வல்லவர். அவரது முக்கிய பலம் அவரது இடதுகை சுழல் பந்துவீச்சு ஆகும். மிகக்குறைந்த நேரத்தில் ஒரு ஓவர் போடுவதில் கெட்டிக்காரர் ஜடேஜா. மேலும் ரெய்னா பிராவோ டூ ப்லெஸிஸ் போன்ற சிறந்த பீல்டர்கள் இருக்கும் சென்னை அணியின் சிறந்த பீல்டர் ஜடேஜா. இந்த ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணியில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை இந்திய அணிக்கு தேர்வு ஆவர் என நம்புகிறோம்.
மாற்று ஆல் ரவுண்டர்கள்: கரண் சர்மா, டேவிட் வில்லி, மிட்செல் சான்ட்னர்
4)பந்துவீச்சாளர்கள்(தீபக் சஹார், மோஹித் சர்மா, இம்ரான் தாஹிர்)
தீபக் சஹார் சென்ற முறை சென்னை அணியின் துவக்க பந்துவீச்சாளர் ஆக இருந்து பவர் ப்ளேவில் சிறப்பாக பந்துவீசினார். பிட்சின் தன்மைக்கும், விளையாடும் வீரருக்கு தகுந்தாற் போல் சஹார் பந்து வீசினார். இது அவருக்கு சிறப்பான பலனை அளித்தது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையடியதான் மூலம் இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சென்ற முறை ஐபிஎல் தொடரை போலவே இந்த முறையும் சஹார் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன்.
2019 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி வாங்கிய இரண்டு வீரர்களில் ஒருவர் மோஹித் சர்மா. ஏற்கனவே சென்னை அணிக்காக அவர் 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடி 23 விக்கெட்கள் வீழ்த்தி புர்ப்பில் காப் வென்றுள்ளார். எனவே சென்னை அணியின் தேவையான அனுபவம் வாய்ந்த இந்திய வேகபந்து வீச்சாளர் என்ற இடத்தை மோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு நிரப்புவார் என்று நம்புவோம்.
தென் ஆப்ரிக்கா வீரர் இம்ரான் தாஹிர் சென்னை அணியின் பிரதான சுழல் பந்து வீச்சாளராக களமிரங்குவார் என தெரிகிறது. 38 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 53 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் தாஹிர். மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி எதிர் அணியின் முக்கிய விக்கெட்டுகளை எடுப்பதில் தாஹிர் வல்லவர். சென்ற முறை ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது ஹோம் ஆட்டங்களை புனேவில் விளையடியதால் அவர் ஆடும்11இல் அதிகமாக விளையாடவில்லை. இந்த முறை போட்டி சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்தில் நடந்தால் தாஹிர் ஆடும்11இல் விளையாட வாய்ப்புள்ளது. உலக கோப்பை காரணமாக ஐபிஎல் தொடரின் பாதியில் தாஹிர் சென்றால் அவரது இடத்தை இந்திய வீரர் ஹர்பஜன் சிங் நிரப்பக்கூடும்.
மாற்று பந்துவீச்சாளர்கள்: ஹர்பஜன் சிங், ஷ்ரதுல் தாக்கூர், லுங்கி ங்கிடி,கே எம் ஆசிப்