அதிரடி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்தில் வருவது ஐபிஎல் தொடர் தான். அதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் விளையாடும் அதிரடி வீரர்கள் தான். வருடம் தோறும் நடத்தப்படும் இந்த ஐபிஎல் தொடரானது, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிக முக்கியமான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் அதிக முறை இறுதிப் போட்டிக்கு சென்ற ஒரே அணி என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத 2 மிகப் பெரிய வெற்றிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ( 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டுவைன் ஸ்மித் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக 2 சிக்ஸர்கள் விளாசிய டுவைன் ஸ்மித், 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்து விட்டு அவுட்டாகி வெளியேறினார்.
பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய பிரண்டன் மெக்கலம், 44 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய மகேந்திர சிங் தோனி, 27 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. முரளி விஜய் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சேவாக் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஜார்ஜ் பெய்லி, ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய முரளி விஜயும், 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் வெறும் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
#2) டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக ( 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், டெல்லி அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டுவைன் ஸ்மித் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய டுவைன் ஸ்மித் 29 ரன்கள் அடித்து விட்டு அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 41 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் வந்து அதிரடியாக 2 சிக்ஸர்கள் விளாசிய தோனி, 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்தது.
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மயங்க் அகர்வால் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், 21 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் ஏதும் அடிக்கவில்லை. அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர்.
இறுதியில் 15 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 84 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்