கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 12வது ஐபிஎல் தொடர் சென்னையில் இன்று ஆரம்பமாகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் அணியை கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்நிலையில் இதற்கு முன்னர் இந்த அணிகள் நேருக்கு நேர் மோதியதில் என்ன நடந்துள்ளது என்பதனை பார்க்கலாம்.
இதுவரையில் இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 22 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அதில் சென்னை அணி 14 முறையும், பெங்களூரு அணி 7 முறையும், ஒரு ஆட்டம் முடிவு தெரியாமலும் இருந்துள்ளன. அதேபோல் மிக முக்கியமான தருணங்களிலும் தோனியின் படையே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 2011, 2015 இரு வருடங்களில் நடந்த பிளே ஆப் போட்டிகளிலும், 2011ம் ஆண்டு நடந்த பைனலிலும் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை வசப்படுத்தியுள்ளது.
கடைசியாக பெங்களூரு அணி 2014ம் ஆண்டு நடந்த ஏழாவது ஐபிஎல் தொடரில் ராஞ்சியில் நடந்த லீக் போட்டியில் சென்னையை வீழ்த்தியுள்ளது. அதன் பின்னான ஆட்டங்களில் சூப்பர்கிங்ஸ் அணியே தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் RCB அணி சென்னையில் ஒரே ஒரு முறை மட்டுமே சென்னையை வீழ்த்தியுள்ளது. அதுவும் கும்ப்ளே தலைமையில் 2008ம் ஆண்டு நடந்தது. அதற்க்கு பின்பு RCBன் நிலைமை பரிதாபம்தான்.
என்றும் மனதில் நிலைத்திருக்கும் போட்டிகள்:
# கடந்த வருடம் நடந்த ஒரு போட்டியில் RCB அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது. ஆனாலும் தோனி மற்றும் ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது.
# இது அந்த அணிக்கு முதல் முறை அல்ல ஆல்பி மோர்கெல் விராட் கோஹ்லியின் பௌலிங்கை தெறிக்கவிட்டு ஒரு வெற்றியை தேடிகொடுப்பார்.
#3 இதே போன்று பெங்களூருவில் நடந்த ,மற்றோரு போட்டியில் RCB நிர்ணயித்த இலக்கை துரத்தி கொண்டிருந்தது CSK அணி. எதிர்பாராத விதமாக மிடில் வரிசை வீரர்கள் சொதப்ப அந்த போட்டி இறுதி ஓவர் வரை சென்றது. இறுதி ஓவரை ஆர்.பி.சிங் வீசினார், கடைசி பந்திற்கு 2 ரன்கள் தேவை என்றநிலையில் ஜடேஜா அந்த பந்தை தூக்கி அடித்தார். அதை 3rd மேன் திசையில் எல்லைக்கோட்டிற்கு அருகே கேட்சாக மாறியது. அந்த நொடியில் RCB அணியினர் மகிழ்ச்சியில் திளைக்க அதே நேரத்தில் சென்னை அணியினரும் வெற்றியை கொண்டாட தொடங்கினர்.
காரணம் அந்த கடைசி பந்தை நடுவர் நோ-பால் என அறிவித்தார். நோ-பால்க்கு 1 ரன் மற்றும் இன்னொரு ரன்னை அவர்கள் ஓடி எடுக்க, ஒரு பந்தை மீதம் வைத்து த்ரில் வெற்றி பெற்றது சென்னை அணி.
இப்படி முந்தைய போட்டிகளின் முடிவுகள் சென்னை அணிக்கு சாதகமாக இருந்தாலும் இம்முறை எப்படியேனும் கோப்பையை வென்று இத்தனை வருட ஏக்கத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்க காத்திருக்கும் பெங்களூரு அணியை இன்று வீழ்த்தி தன் சொந்த மண்ணில் இந்த ஆண்டுக்கான வெற்றிக்கணக்கை நடப்பு சாம்பியன்கள் தொடங்குவார்களா என்பதை இரவு வரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.