T-20 தொடர்களில் மிக விறுவிறுப்பான தொடர் என்றால் அது ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் அதிரடிக்கும், விறுவிறுப்புக்கு, பஞ்சம் இருக்காது. ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளிலுமே தலைசிறந்த பேட்ஸ்மென்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருப்பதால், அனைத்து போட்டிகளும் கடைசி நிமிடம் வரை அனல் பறக்கும். வருடத்திற்கு ஒரு முறை என்ற வீதம் இந்த ஐபிஎல் தொடரானது கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் தலைசிறந்த அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இந்த இரண்டு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத 2 வெற்றிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டி
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற இந்த போட்டியில், சச்சின் டெண்டுல்கர் காயம் காரணமாக விளையாட வில்லை என்பதால், ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான டுவைன் பிராவோ, 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹேடன் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார்கள். 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 208 ரன்கள் குவித்தது.
இந்த கடினமான இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி சேஸ் செய்யும் பொழுது தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது. ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி 43 ரன்கள் விளாசினார். பின்பு மிடில் ஆர்டரில் வந்த ஹர்பஜன் சிங் அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 12 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முத்தையா முரளிதரன் 19-வது ஓவரை வீச வந்தார். இந்த ஓவரில் முத்தையா முரளிதரன் வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, ஹர்பஜன் சிங் விக்கெட்டையும் கைப்பற்றினர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
#2) 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதினர். இந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. பின்பு சுரேஷ் ரெய்னாவும், தோனியும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக 3 சிக்சர்களை பறக்கவிட்ட சுரேஷ் ரெய்னா, 33 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 168 ரன்கள் அடித்தது.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. சச்சின் டெண்டுல்கர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். முதல் பத்து ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. அதன் பின்பு குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 18 பந்துகளில் 55 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் சென்னை அணியின் டக் போலிங்சர், 18-வது ஓவரை வீச வந்தார். இந்த ஓவரில் பொல்லார்ட் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார். அதன் பின்பு 19-வது ஓவரை அல்பி மோர்கல் வீச வந்தார். இந்த ஓவரில் அல்பி மோர்கல் சிறப்பாக பந்துவீசி, அம்பத்தி ராயுடு மற்றும் பொல்லார்ட் ஆகிய இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.