சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச தொடரில் அமைந்தது. பிறகு, 2005-இல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தான் இவருக்கு முதலாவது டெஸ்ட் போட்டியாகும். மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 33 அரைசதம் ஆறு சதங்கள் உட்பட 4876 ரன்களை குவித்துள்ளார். தனது 9 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையை 2014ஆம் ஆண்டோடு முடித்துக்கொண்டார். மேலும், 341 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 71 அரைசதங்கள் 10 சதங்கள் உட்பட 10,500 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் மட்டும் அல்லாது, இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கம்பீரமாக வழி நடத்தி வருகிறார். இவரது தலைமையில் மும்முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் இருமுறை சிஎல்டி20 சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது, சென்னை அணி. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 455 ரன்கள் குவித்து, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். தற்போது இந்த தொகுப்பில் இவரது தலைமையில் விளையாடிய சென்னை அணியின் அனைத்து பயிற்சியாளர்களை பற்றிக் காணலாம்.
#1.லட்சுமிபதி பாலாஜி:
சென்னையைச் சேர்ந்த வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான லட்சுமிபதி பாலாஜி, இந்திய அணிக்காக 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகினார். இவர் விளையாடிய 30 ஒருநாள் போட்டிகளில் 34 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். தொடர்ச்சியான காயங்கள் காரணமாக இவரது டெஸ்ட் வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. 2003 - 2005 இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் வெறும் 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அவற்றில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இவரும் தோனியும் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் ஒன்றாக இணைந்து விளையாடினார்கள். இவர் மூன்று வெவ்வேறு ஐபில் அணிகளுக்காக விளையாடி உள்ளார். முதல் மூன்று சீசன்களில் சென்னை அணிக்காகவும் அதனைத் தொடர்ந்து, கொல்கத்தா அணிக்காகவும் பின்னர், பஞ்சாப் அணிக்காகவும் ஒப்பந்தமாகி விளையாடினார்.
#2.ஸ்டீபன் பிளமிங்:
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான ஸ்டீபன் பிளமிங் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ஆவார். மேலும், இவரது சொந்த நாட்டு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் வீரர் ஆவார். மொத்தம் 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1172 ரன்களையும் 280 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9037 ரன்களையும் குவித்துள்ளார்.
முதலாவது ஐபிஎல் தொடரான 2008 ஆம் ஆண்டில் சென்னை அணியில் இடம் பெற்று தோனி தலைமையில் விளையாடினார். அடுத்த ஆண்டு தான் ஓய்வுபெற்ற பிறகு, சென்னை அணிக்காக பயிற்சியாளராகவும் செயல்படத் தொடங்கினார். தற்போது இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக விளங்கி வருகிறார்.
#3.மைக்கேல் ஹசி:
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் "மிஸ்டர் கிரிக்கெட்"என்று அழைக்கப்படுபவருமான மைக்கேல் ஹசி, 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 55.52 என்ற வியக்கத்தக்க சராசரி உட்பட 6235 ரன்களை குவித்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர், மொத்தம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்களும் 72 அரை சதங்களும் அடித்துள்ளார். 2004ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் கண்ட இவர், மொத்தம் 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில், 48.15 என்ற சராசரியுடன் 5442 ரன்களை குவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
2008ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் இடம்பெற்ற இவர், முதலாவது ஐபிஎல் தொடரில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் கோப்பையை வென்ற சென்னை அணியில் முக்கிய பங்காற்றினார். இவர் சென்னை அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறார். கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டும் அதே பணியை தொடர்கிறார்