இந்திய அணி விளையாடிய முதலாவது பயிற்சி ஆட்டத்தில் மோசமான பேட்டிங் வெளிப்பாட்டால் இந்திய அணி தோல்வியடைந்தது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் லீக் சுற்றிலும் இதே ஆட்டத்திறனை வெளிபடுத்த உள்ளனர். இந்திய அணியின் ஆடும் லெவனில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இருப்பினும், இந்த இரு பயிற்சி ஆட்டங்களிலும் ஜொலிக்க தவறிய 3 இந்திய வீரர்கள் பற்றி தொகுப்பில் காணலாம்.
#1.ஷிகர் தவான்:
இந்திய அணியின் நிலையான தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார், சிகர் தவான். இரு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடிய இவர், வெறும் மூன்று ரன்களை மட்டுமே குவித்துள்ளார். பந்தினை சரியாக கவனிக்க தவறி தனது விக்கெட்டை விரைவிலேயே இழந்து வருகிறார், ஷிகர் தவான். நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டிரென்ட் போல்ட் இடமும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் முஷ்டஃபிஜுர் ரகுமான் இடமும் தமது விக்கெட்டை இழந்துள்ளார். விரைவிலேயே தமது இயல்பான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தினால் மட்டுமே உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடியின் பங்களிப்பு சிறப்பாக அமையும்.
#2.விஜய் சங்கர்:
இந்திய அணியின் நான்காம் இடத்தில் களமிறக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர், வலைப் பயிற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராவிதமாக தமது விரலில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். இதனால், நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இவர் விளையாடவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் களம் திரும்பிய இவர், பேட்டிங்கில் ஏழு பந்துகளை சந்தித்து வெறும் இரு ரன்களை மட்டுமே குவித்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சிலும் ஆறு ஓவர்களை வீசி 46 ரன்களை வாரி வழங்கினார். மேலும், எந்த ஒரு விக்கெட்டையும் இவர் கைப்பற்றவில்லை. ஏற்கனவே, இந்திய அணியில் கே.எல்.ராகுல் சதம் அடித்து ஆடும் லெவனில் தமது இடத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பில் நீடித்து வருகிறார். இதனால், விஜய் ஷங்கர் தற்போது ஆடும் லெவனில் இணைக்கப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
#3.தினேஷ் கார்த்திக்:
இரு பயிற்சிகளில் ஆட்டங்களிலும் போதிய வாய்ப்புகள் அளிக்கப்படாமல் இருந்ததால் தினேஷ் கார்த்திக் தமது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. ஏற்கனவே, அணியின் விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி உள்ளதால் இம்முறை உலக கோப்பை தொடரில் பெரும்பாலான போட்டிகளில் இவர் ஆடும் லெவனில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு தான். இவர் அணியின் மாற்றி விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார்.